அந்தச் சீடரின் ஆன்மீக அனுபவமும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் குருவிற்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.
ஒரு நாள் குரு, தன்னைக் காண வந்த பார்வையாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.புதிய சீடரும் அந்த உரையாடலில் கலந்துகொண்டார்.உரையின் முடிவில் "கடவுளைக் காண்பது சுலபம்" எனக் குரு குறிப்பிட்டார்.
கேட்டுக்கொண்டிருந்த புதிய சீடருக்கு குருவின் கூற்று ஆச்சர்யமாய் இருந்தது.
மற்றொருநாள், குருவைச் சந்தித்து, குருவே தாங்கள், "கடவுளைக் காண்பது சுலபம்" என்று கூறினீர்கள், அது எப்படி சாத்தியம், தயவு செய்து அடியேனுக்கு விளக்கிக் கூற முடியுமா? எனக் கேட்டார்.
சீடரைப் பார்த்துக் குரு, சீடனே!, உனக்கு விளக்கம் அளிப்பதற்குமுன் நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்.
அருகிலிருக்கும் ஊருக்குச் செல், அங்கு நீ சந்திக்கும் ஓவ்வொரு நபரிடமும், அவர்கள் செய்யும்,
அல்லது செய்ய நினைக்கும் தினசரி காரியங்களை அறிந்து அவையனைத்தையும் பட்டியலிடு.
குறைந்தபட்சம் ஐம்பது நபர்களைச் சந்தித்துத் தகவல்கலைச் சேகரித்தால் போதுமானது.
முடிவில் பட்டியலை என்னிடம் கொண்டு வா என்றார்.
சீடன் குருவின் ஆணைப்படி, அருகில் உள்ள ஊருக்குள் சென்றான்.அப்போது, எதிர் திசையில் ஒருவர் அவசர அவசரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.அவரை நிறுத்தி அன்றாடம் அவர் செய்யும் வேலைகளையும் செய்ய நினைக்கும் காரியங்களையும் பற்றி வினவினான்.
அவர் கூறினார், நான் தினமும் ஐந்து மணிக்கே எழுந்து விடுவேன்.காலைக் கடன்களை முடித்து,குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பி விடுவேன். சிற்றுண்டி உண்பதற்கு எனக்கு நேரமிருக்காது, அதற்குள் நான் செல்லவேண்டிய மில்லுக்கு சொந்தமான பஸ் வந்துவிடும்.
பகல் முழுவதும் வேலையில் ஆழ்ந்துவிடுவேன்.மாலையில் நண்பர்களுடன் வீடு திரும்பும் வழியில் மது அருந்துவது வாடிக்கை.வீட்டுக்குள் நுழையும் போது இரவு ஒன்பது மணி ஆகும்.மனைவி என்னைத் திட்டிக்கொண்டே சாப்பாடு போடுவாள், சாப்பிட்டுவிட்டு தூங்கப் போய்விடுவேன்.ஆனால் எனக்குத் தூக்கமே வராது.என் சிந்தனை முழுதும் சம்பாத்தியத்தை
இரட்டிப்பு ஆக்குவதிலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவது எப்படி? என்பதிலும்தான் இருக்கும் என்றார்.
சீடர் கவனமாக அனைத்தையும் தாளில் குறித்துவைத்துக் கொண்டார்.
அடுத்து, ஒரு கல்லூரி மாணவனிடம் தனது கேள்வியைக் கேட்டார் சீடர்.
அந்த மாணவன் கூறினான், நான் எழும்பும்போதே மணி எட்டைத் தாண்டிவிடும், தினமும் கல்லூரிக்குத் தாமதமாகவே செல்வேன்.வகுப்பு நேரத்தில் சக மாணவர்களுடன் 'கடலை' போடவே நேரம் சரியாக இருக்கும், பாடத்தை யார் கவனிப்பார்கள்?.மாலையில் வீடு திரும்பியதும் அருகில் உள்ள மைதானத்தில் சிறிது நேரம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவேன்.மற்ற சமயங்களில் என் எண்ணம் முழுதும் படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் மூழ்கியிருக்கும்- அரட்டை,சிகரெட்,சினிமாவைத்தான் சொல்லுகிறேன் என்றான்.
மாணவன் கூறியதனைத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டு அருகிலிருந்த கோயிலை நோக்கி நடந்தார் சீடர்.
கையில் பூக்கூடையுடன் ஒரு பெண், கோயில் வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.அவளிடமும் தனது கேள்வியைக் கேட்டார் சீடர்.
அந்தப் பெண் சொன்னாள், ஐயா! எனக்கு கல்யாணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது.எனது கணவரின் குடும்பம் பெரியது.
அதிகாலையிலேயே சமையல் வேலையில் இறங்கிவிடுவேன்.
மதியத்திற்குப் பிறகுதான் எனக்கு ஓய்வு கிடைக்கும்.அந்த நேரத்தில் மாமியாரும் நானும் டிவி சீரியல் பார்ப்போம்.
மாலை வேளையில் கடைக்குச் சென்று காய்கறி வாங்கி வருவேன்.இரவுச் சாப்பாடு முடிந்ததும் மறுபடி டிவி பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.
சீடர், அம்மா! இப்போது நீங்கள் கோயிலுக்கு வந்து இருக்கிறீர்களே அது எப்படி உங்களால் முடிந்தது என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் கூறினாள், ஓ அதுவா!,என் மாமியாருக்கு எதிர் வீட்டு அக்காவை அறவே பிடிக்காது,எனக்கு என் மாமியாரைப் பிடிக்காது. எதிர் வீட்டு அக்காவும் நானும் ஓவ்வொரு வெள்ளியும் கோயிலில்தான் சந்தித்துக் கொள்வோம்.கோயிலில்தான், டிவி சீரியல் பற்றியும், வீடு,சமையல் மற்றும் சினிமா கதைகளைப் பற்றி விரிவாகப் பேச முடியும்.இப்போதும் அவளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றாள்.
சீடர் அனைத்தையும் கவனமாகக் எழுதிக் கொண்டார்.
இப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் கேள்விகளைக் கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார்.ஆசிரமத்திற்குத் திரும்பி, தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டதாக குருவிடம் அறிவித்தார் சீடர்.
குறிப்பு அடங்கிய தாள்களை குருவிடம் சமர்ப்பித்தார்.
இப்போது குரு கேட்டார், சீடனே! நீ சந்தித்த நபர்களில் ஒருவராவது "நான் கடவுளை அடையும் முயற்சியில் இருக்கிறேன், கடவுளை அறிய முயற்சித்தேன், கடவுள் பற்றிய உணர்வுடன் வாழ்கிறேன், கடவுளுக்காக நேரத்தைச் செலவிடுகிறேன்
அல்லது செலவிடுவேன் " என்று கூறினார்களா? என்று கேட்டார்.
சீடர் தான் எழுதி வைத்திருந்த குறிப்பு எதையும் பாராமலேயே "அப்படி யாரும் கடவுள் பற்றி நினைக்கவும் இல்லை, யாருக்கும் அப்படி ஒரு நினைவு இருப்பதாகவும் தெரியவில்லை" என்று பதிலளித்தார்.
குரு சொன்னார், சீடனே காலம் எப்படியாகிவிட்டது பார்த்தாயா!, ஓவ்வொரு பொழுதும், ஓவ்வொரு வினாடியும் இறை உணர்வுடனும் வாழ்ந்து கொண்டிருந்த மனித சமுதாயம் எங்கே!, பரம்பொருள் பற்றிச் சிந்தனையே இல்லாத இன்றையச் சமுதாயம் எங்கே?.
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்று வாழ்க்கை முழுதும் இறைப்பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் எங்கே?
டிவியிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் நாள் முழுதும் ஈடுபட்டாலும் அலுக்காத இன்றைய சமுதாயம் எங்கே?.
பெற்றோரையும் பெரியோர்களையும் மதித்து வாழ்வில் பெரும்பகுதியை அதற்காகவே அர்பணித்த நம் முன்னோர் எங்கே?
முதியோர் இல்லத்தில் உள்ள பெற்றோரை மாதத்தில் ஒருமுறை காண்பதற்கு நேரம் ஒதுக்கத் தயங்கும் இன்றைய சமுதாயம் எங்கே?.
பிறப்பின் இரகசியமே இறையுணர்வு பெறுவதும், இறை நிலையை அடைவதுமே என்று அறநெறியில் வாழ்ந்துவந்த நம் முன்னோர்கள் எங்கே?.கோயில்களும், ஆலயங்களும்,வழிபாட்டுத் தலங்களும் வியாபாரக் கூடங்களாகிவிட்ட இன்றைய நிலை எங்கே?.
கடவுளைக் காண்பது சுலபமே, ஆனால் யாருக்கு அது சுலபம்?. ஆதி,அனாதி, இறை நிலை,பரம்பொருள்,சுத்தவெளி,மெய்ப்பொருள் பற்றியே சிந்தனையும் உணர்வும் உள்ள மெய்யுணர்வாளர்களுக்கே இது சாத்தியம்.
இதுவே உனது கேள்விக்கு விடை என்றார் குரு.
இதையே வேதாத்திரி மகரிஷி,
"கடவுளைக் காண முடியுமா என்றால் காண முடியும். எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ, எந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டுமோ, அப்படிப்பார்த்தால் காணலாம். ஒரு செயல் செய்கிறோம், எந்த செயல் செய்தாலும் ஒரு விளைவு இருக்கிறதல்லவா? கையைத் தட்டினேன், சப்தம் வந்தது. கையைத் தட்டிய வரைக்கும் தான் என்னுடைய முயற்சி. சப்தம் நான் செய்தேனா, ஒலியை நான் செய்தேனா, நான் கொண்டு வந்தேனா? இல்லவே இல்லை, இருப்பில் இருந்து, என்னுடைய செயலினால் குவிந்தது, காது கேட்கின்ற அளவிற்குக் குவிந்தது, அவ்வளவுதான் சொல்லலாம்.
ஆகவே இறைவன் இல்லாத இடமே இல்லை. அதற்கு அடையாளம் என்ன? நீ எந்த செயலைச் செய்தாலும் அதற்கு விளைவாக வருபவனும் இறைவன் தான். அது தான் இறைவனுடைய செயலே. அந்த செயல் அதனுடைய அனுபவத்தை வைத்துக் கொண்டு நல்ல செயலாக இருக்க வேண்டும் என்று சிந்தனையோடு திட்டமிட்டுச் செய்வோமானால் நலமே விளையும். இல்லை, புலனளவில் கவர்ச்சியாகி மயக்கத்திலே ஏதோ வேகத்திலே செய்கின்ற போது இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். இன்பம் வேண்டும், அமைதி வேண்டும் என்றால் அதற்கு இறையுணர்வு, அறநெறி இரண்டும் வேண்டும்" என்று கூறுகிறார்.
கொசுறு:
ஒருவன் தனது நண்பனிடம்:
நல்லவங்க சிரிப்பில் கடவுளைக் காணலாம்!
அதுக்காக......
எனக்குப் போன் பண்ணி என்னைச் சிரிக்கச் சொல்லி
தொல்லை பண்ணக் கூடாது! சரியா?
அதுக்காக......
எனக்குப் போன் பண்ணி என்னைச் சிரிக்கச் சொல்லி
தொல்லை பண்ணக் கூடாது! சரியா?