Monday, 28 January 2013

உழைப்பே உயர்வு!

'எழிலன்' என்று சொன்னால் அந்த ஊரில் தெரியாதோர் யாருமில்லை. அந்த ஊர்ச் சிறுவர்கள் கூட அவனைச்  'சோம்பல் எழிலன்' என்று கூப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.
'எல்லாம் அவனது அம்மா கொடுத்த செல்லம்' இப்படிதான் குறைபட்டுக் கொள்வார் எழிலனின் அப்பா.அவர் ஒரு கடும் உழைப்பாளி.தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்திற்காகவும் ஊர் மக்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.'இப்படிப்பட்டவருக்கு ஓர் சோம்பேறி மகனா?' என்று ஊர் மக்கள் பேசிக் கொள்வார்கள்.
எழிலன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு  வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.தங்கை யாழினியோ   பள்ளி இறுதியாண்டில்  படித்துக்கொண்டிருந்தாள்.
'வேலை நம்மைத் தேடி வராது, நாம் தான் அதைத் தேடிப் போக வேண்டும்' என எழிலனுக்கு அவனது அப்பா புத்திமதி கூறுவார்.அவன் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதோடு சரி. 
எழிலனுக்கு வேலை கிடைத்தபாடில்லை.ஒரு வருடம் இரண்டு வருடமல்ல ஏழு வருடங்கள் அவன் காத்திருந்தான்.தங்கை யாழினி திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குப்  போய்விட்டாள்.
பொறுப்பு ஏதுமில்லாமல் அம்மாவின் தயவால் உழைக்காமல் வீட்டிலேயே சாப்பிடுவதிலும், தூங்குவதிலும் பொழுதைக் கழித்தான் எழிலன்.  
பொறுமையாய் இருந்த அப்பா ஒரு நாள் எழிலனைப் பார்த்து, 'வேலை செய்து உழைத்துச்  சம்பாதிக்காமல் இருப்பாயென்றால் உனக்கு இந்த வீட்டில் இடமில்லை' என்றார்.
அவர் வழக்கமாக கூறும் வார்த்தைதான் என்றாலும் அன்று சற்றுக்  கடுமையாகவே பேசிவிட்டார்.எழிலனுக்கு ஆத்திரம் வந்தது.அம்மா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டை விட்டுக்  கோபமாய் வெளியேறினான்.
ஊரின் குளக்கரையில் இருந்த ஆலமரத்தின் கீழே படுத்துத் தூங்கினான்.மாலை நேரம் வந்ததும்  வீடு திரும்பினான்.எழிலனைப் பார்த்த அம்மா அவனுக்கு ஆறுதல் கூறினாள்.அவன் கையில் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைத் திணித்தாள்."அப்பா வீடு வந்ததும் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, நீயே உழைத்துச் சம்பாதித்தது என்று அவரிடம் கூறு" என்று கூறினாள்.
அவனும் அம்மா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.அப்பா வந்ததும் அவர் கையில் பணத்தைக் கொடுத்து தானே உழைத்துச்  சம்பாதித்த பணம் இது எனக் கூறினான்.
அப்பாவோ, அவன் கொடுத்த பணத்தை நான்காகக்  கிழித்து எரிந்துகொண்டிருந்த விறகடுப்பிற்குள் விட்டெறிந்தார்.எழிலன் அவர் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அம்மா  ஒன்றும் பேசவில்லை.
மறு நாள் காலையில் அப்பாவோ கோபத்துடன் "உழைக்காமல் நீ  வீட்டிற்கு வரக் கூடாது" எனக் கத்திவிட்டு  வெளியிற் சென்றார்.அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.முதல் நாள் போலவே வீட்டை விட்டு வெளியேறினான்.ஆலமரத்தடியில் வந்து படுத்து உறங்கினான்.இருட்டுமுன் வீடு திரும்பினான்.அவனது அம்மா அவன் கையில் கசங்கிய இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தாள்."இது கசங்கிய நோட்டு என்பதால் உண்மையாகவே நீ சம்பாதித்தது என அப்பா நம்பிவிடுவார்" என்றாள்.அப்பா வந்ததும் அவர் கையில் கசங்கிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து "இது நான் சம்பாதித்த பணம்" என்று கூறினான்.சென்ற முறை போலவே அன்றும் அவர் அந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டுபோய் எரியும் அடுப்பில் விட்டெறிந்தார்.செய்வதறியாத எழிலன் அதையும்  பொறுமையாய்க்  கவனித்துக்கொண்டிருந்தான்.அப்பாவோ கோபமாய் அவனைப் பார்த்துவிட்டுத்  தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
அதி காலையில் அவனிடம் கடுமையாய் நடந்துகொண்டார்."இனிமேல் உழைக்காமல் நீ வீட்டு வாசற்படி ஒருக்காலும் மிதிக்கக் கூடாது" எனக் கத்திவிட்டுச் சென்றார்.
அன்று அவனும் ஒரு முடிவுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.அம்மா கத்திக்கத்தி அழைப்பது கூட அவன் காதில் விழவில்லை.
காய்கறிச் சந்தைக்குச் சென்றான், கிடைத்த கூலிவேலையைச் செய்தான்.பாரமுள்ள காய்கறி மூட்டைகளைச் சுமந்தான்.கூலிப் பணம் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினான்.அம்மாவிடம் கூலிப் பணம் நூற்றைம்பது ரூபாய்களைக் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கும்படி கூறினான்.அம்மாவும் அவன் கொடுத்த பணத்தை அப்பா வந்ததும் கொடுத்தாள்.வழக்கம் போல் ரூபாய்த் தாள்களை அடுப்பில் வீசிஎறிந்தார் அவர்.அப்பாவைக் கவனித்துக் கொண்டிருந்த எழிலன், ஓடிவந்து அடுப்பில் விழுந்த ரூபாய்த் தாள்களை அவசர அவசரமாகப்  பொறுக்கி எடுத்தான்.அப்பா ஓடி வந்து அவனைக்  கட்டித் தழுவிக் கொண்டார்.பேசாமல் கவனித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அவர் கூறினார், "இதற்கு முன் நான் விட்டெறிந்த ருபாய் நோட்டு அனைத்தும் எழிலன் சம்பாதித்தது இல்லையென்பதை, அவன் பணம் நெருப்பில் எரிவதை வேடிக்கை பார்க்கும் போதே அறிந்து கொண்டேன்" எனக்  கூறினார்.கஷ்ட்டப் பட்டு உழைத்த பணத்தை நெருப்பில் போடுவதை 
யார்தான் அனுமதிக்க முடியும்? அதை எப்படி வேடிக்கையாக  பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.
"உழைப்பின் உயர்வை அவனுக்கு உணர்த்தவே" இவ்வாறு செய்தேன் என்றார்.இப்போது அம்மா புரிந்து கொண்டாள்.
எழிலன் தனது தவறை உணர்ந்து உழைத்து முன்னேற உறுதி  பூண்டான்.உழைப்பின் அருமையையும்  புரிந்து கொண்டான்.ஊர்மக்கள் மெச்சும் வண்ணம் உழைத்து முன்னேறினான்.

 
வேதாத்திரி மகரிஷி  உழைப்பைப்  பற்றி கூறுகையில்  
"உலகில் வாழ் மக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குப்  பொருளாதார வளம் அமையவேண்டும். பணம் என்பது உழைப்பின் அடையாளம் (token of labour is money).
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒருவரின் ஊதியம் இன்னொரு குடும்ப உறுப்பினருக்கும் நிறைவு
செய்யக்கூடிய அளவில் அமையவேண்டும்.உழைக்கத் தெரியாத, உழைக்க முடியாத மக்களுக்கும் ஏற்றதொரு வாழ்வாதாரத்தை
அரசு அமைக்கவேண்டும். மேலும் உலகில் ஒருவர் உழைப்பை இன்னொருவர் பறித்துண்ணும் போக்கு வெகு அதிகமாகவே உள்ளது. இது மக்களிடம் மட்டுமல்ல, ஆட்சியாளரிடமுங் கூட அமைதுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும். அனைவரும் உழைத்துண்டு வாழ வேண்டும். உழைப்பின் அவசியத்தை அனைவரும் அறியவேண்டும்" என்கிறார்.

கொசுறு :
பக்தா, உன் துயர் துடைக்க கூரையைப்
பிய்த்துக் கொண்டு கொடுப்பேன் என்றார் கடவுள் 
வேண்டாம், நான் உழைத்துச் சம்பாதித்தது
அது ஒன்றுதான் என்றான் பக்தன் 

No comments:

Post a Comment