Tuesday, 4 December 2012

கவலை ஒழித்தல்!(Eradication of Worries)

 ஊர் ஒன்றில் பெரியவர்களின் கூட்டம் ஒன்று நடந்தது.

அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவர், "நம் எல்லோருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நாம் எல்லோரும் எதற்காகப் பிரச்சனைகளுக்குக் கவலைப்பட வேண்டும். யாராவது ஒருவரை நமக்குப் பதில் கவலைப்படச் சொல்வோம். அவரிடம் அதற்குத் தகுந்த கூலியை அளித்து விடுவோம். என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"அருமையான திட்டம். நம் எல்லோருக்கும் பதில் யார் கவலைப்படுவார்கள்?" என்று கேட்டார் இன்னொரு பெரியவர்.

"நம் ஊரில் செருப்பு தைக்கும் பாணினி  என்பவர் இருக்கிறார்.
அவர் அனைத்து வேலைகளையும் கைகளால்தான் செய்கிறார். நமக்காக கவலைப்பட அவர் ஒருவருக்குத்தான் நேரம் உள்ளது. அதற்காக அவருக்கு நல்ல தொகை தந்து விடுவோம்." என்றார் மற்றொரு பெரியவர்.

எல்லோருக்கும் அவர் கருத்து சரியெனப்பட்டது.

அவர்கள் அனைவரும் கூட்டமாகச் சென்று பாணினியை   சந்தித்தார்கள்.

அவரிடம் "எங்கள் எல்லோருக்கும் பிரச்சனைகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் எங்கள் பிரச்சனைகளை உங்களிடம் வந்து சொல்வோம். எங்களுக்குப் பதில் நீங்கள் கவலைப்பட வேண்டும்." என்றார்கள்.

"உங்களுக்காக நான் கவலைப்படுவதற்கு எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டார் பாணினி.

"மாதம் பத்தாயிரம்  ரூபாய்  தருகிறோம்." என்றார்கள் பெரியவர்கள்.

"ஒரு மாதம் முழுமையும் செருப்பு தைக்கும் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூலி கிடைக்காது, பத்தாயிரம்  ரூபாய் கிடைத்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்டார் அவர்.

 
மகரிஷி கூறுகிறார்: கவலையால் உடல், உள்ள நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்துவிடுகிறது.இதனை மனிதன் ஒழித்தேயாகவேண்டும்.கவலையை ஒழிக்க வேண்டுமெனில் இயற்கையின் ஒழுங்கமைப்பை
அறிய வேண்டும்; சிந்திக்கும் திறனைப் பெருக்கிக்கொள்ளவேண்டும்.
தன்னம்பிக்கை வேண்டும்.முயற்சி வேண்டும்.துணிவு வேண்டும்.
மனவளக்கலை பயிற்சி மூலம் கவலையை ஒழிக்க முடியும் என்பதில் ஐயமில்லை!.
கொசுறு:
வளர்ந்து பெரியவன் ஆகியும்  சிறிதும் பொறுப்பில்லாமல், எதைப் பற்றியும் கொஞ்சமும் கவலையில்லாமல்  இருக்கும் தன் மகனை அழைத்தார் தந்தை.
"மகனே!" நீ பெரியவனாகி விட்டாய். இனி வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உன் எதிர்காலத்தைப் பற்றி நீதான் சிந்தனை செய்ய வேண்டும். திடீரென்று நான் இறந்து போவதாக வைத்துக் கொள். உன் நிலை என்ன?  நீ  எங்கே இருப்பாய்?" என்று கம்மிய குரலில் கேட்டார்.
"அப்பா!" இது என்ன கேள்வி? நான் இங்கே தான் இருப்பேன்.இறந்த பிறகு நீங்கள்தான் எங்கே இருப்பீர்கள் என்று தெரியாது" என்றான் அந்த கவலையில்லாத மகன்.

No comments:

Post a Comment