Tuesday, 24 September 2013

மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை  அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த  மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.

அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.

போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.

அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன்,  என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.

பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா  உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.

''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.

"மனைவி நல வேட்பு நாள் (Wife Appreciation Day)" கொண்டாடும் மனவளக்கலை அன்பர்கள் இந்தக் கதையினைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

"உன் கண்ணில் நீர் வழிந்தால்......" கவியரசரின் பாடல் நாம் அறிந்ததே, எனினும் மனைவியின் தியாகத்தைப் போற்றி  எத்துனைபேர் உணர்ந்து மதிக்கிறோம்?.

"கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும், சிந்தனை சிறக்கும், வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும்.சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ அதைச் செய்யும் மனம் உண்டாகும்" என்றும், சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து கணவன்மார் அனைவரும்  திருந்த வேண்டும் என்கிறார் மகரிஷி.

மனைவியைப் பற்றற்ற துறவி எனக் கூறிய மகான் அவர்.இதை எத்துனைபேர்  உணர்ந்து செயல்படுகிறோம் என்பதே இன்றைய கேள்வி!

மனைவியைப் போற்றும் வண்ணம் அவர் எழுதிய பாடல் இதோ:

   "பெற்றோரைப் பிறந்தகத்தைப்
   பிறந்த ஊரை விட்டுப்
   பிரிந்து வந்து பெருநோக்கில்
   கடமையறம் ஆற்றப்
  
   பற்றற்ற துறவியென
   குடும்பத் தொண்டேற்றுப்
   பண்பாட்டின் அடிப்படையில்
   எனைப் பதியாய்க் கொண்டாய்
   நற்றவத்தால் என் வாழ்க்கைத்
   துணையாகிப் பெண்மை
   நலநோக்கில் அன்போடு
   கருணையிவை கொண்டு
  
   மற்றவர்க்கும் தொண்டாற்றும்
   மாண்புமிக்க என்றன்
   மனைவியை நான் மதிக்கின்றேன்
   வாழ்த்தி மகிழ்கின்றேன்" 



கொசுறு:

Female  ல் male இருக்கு
Lady ல் lad இருக்கு
Woman ல் man இருக்கு
She ல் he இருக்கு
அடடா...
Mrs ல் Mr  ம் இருக்கார்!

Tuesday, 23 July 2013

எதற்கு நாம் பயப்பட வேண்டும்....?


சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை.
சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு  வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், ‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.
ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள். ‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.
‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’
பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை. பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்.
உங்கள் பயங்கள் எந்த வகை? அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது சித்தரின்  வழியா? அல்லது குழந்தை வழியா?

"நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, தீய எண்ணம் ஒன்றைதவிர" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.இதை அவரது வார்த்தைகைளில்  கேட்போமா?

"தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும்.நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலுங்கூட அது தீய எண்ணத்தை விலக்கும்.
அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள்.நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்".

கொசுறு:என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி பயந்து நடக்க நீங்க தான் சாமி அருள் புரியணும்.

அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே!

Tuesday, 25 June 2013

எண்ணமே வாழ்வு !

ஆன்மீக குரு ஒருவரிடம் மெத்தப் படித்த இரண்டு மாணவர்கள்
சீடர்களாக சேர்ந்தார்கள். ஒரு சீடர் பறவைகளைப்பற்றி ஆராய்ச்சி
 செய்தவர், இன்னொருவர் வணிகவியலில் மேற்படிப்பு படித்தவர்.
இருவரும் அவ்வப்போது அறிவார்ந்த விஷயங்கள் குறித்து  தங்களுக்குள் விவாதம் செய்வார்கள்.
தியானமும் குருவின் ஆன்மீக வழிகாட்டுதலும்   இரண்டு சீடர்களையும் உன்னத நிலைக்கு இட்டுச் சென்றது.
ஒருநாள் ஆசிரமத்தின் அருகில் இருந்த காய்கறி சந்தைக்கு
இருவருக்கும்  செல்லவேண்டியிருந்தது.
இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
சந்தையின்  ஜன நெருக்கடியான பகுதியுள் நுழைந்தனர்.எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம் கூச்சல்,இரைச்சல்,சப்தம்.இதற்கிடையில் முதல் சீடர் நண்பனே! வெட்டுக்கிளி பறக்கும் சப்தம் உனக்கு கேட்கிறதா? என்றார்.
இரண்டாவது சீடருக்கு வெட்டுக்கிளியின் சப்தம் கேட்கவில்லை.
முதல் சீடன் கைகாட்டிய திசையில் சின்னஞ்சிறிய வெட்டுக்கிளி ஒன்று பறந்து செல்வதைப்  பார்த்தார்.
இவ்வளவு சப்தங்களுக்கும் கூச்சலுக்கும் மத்தியில் உங்களுக்கு மட்டும்  வெட்டுக்கிளியின்  ஓசை எப்படி கேட்டது என்றார்?.
முதல் சீடர் கூறினார், எனக்கு பறவைகளைப் பற்றியும் பூச்சியினங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் அதிகம்.எதையுமே உன்னிப்பாக கவனிக்க பழகிக் கொண்டதால்  பூச்சிகள் எழுப்பும் சப்தத்தையும் என்னால்  உணர முடிகிறது.நம்முடைய  எண்ணமும்,  சிந்தனையும்,ஆர்வமும்  எதில்  அதிகமோ மனமும் அதிலேயே  லயிக்கிறது என்றார்.
ஆச்சர்யமடைந்த இரண்டாவது சீடர் இதை எப்படி அறிந்துகொள்வது,ஏதாவது உதாரணம்  கூறி விளக்கமுடியுமா எனக் கேட்டார்.
மிகவும் எளிது, இப்போது பார், 
தனது கைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளை கைநிறைய எடுத்து தரையில்  விட்டெறிந்தார்  முதல் சீடர்.சில்லறை தரையில் விழும் சப்தம் கேட்டது.
அருகிலிருந்த கூட்டத்தினர் பலரும் முண்டியடித்து  தரையில் விழுந்த காசுகளை குனிந்து பொறுக்கத் துவங்கினர்.
இதைக் கவனித்த இரண்டாவது சீடர்  இப்போது எனக்கு புரிந்தது என கூறினார்.

இன்று  பலருக்கு எண்ணம் முழுவதும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிந்திப்பதிலேயே உள்ளது.அதற்காகவே முழு நேரத்தை  செலவும்  செய்கிறோம்.இது சரியா? என நமக்கு நாமே கேள்வியெழுப்ப வேண்டும்.
நமக்குத் தோன்றும் எண்ணங்களை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் மனதில் நினைக்கலாமா?, கற்பனை பண்ணலாமா?. ஒருவனுடைய உயர்வும் தாழ்வும்  அவனது மனதில் தோன்றும் எண்ணங்களே.
மனதில் நல்ல எண்ணங்களை உதிக்கப் பண்ணவேண்டும், தூய்மைப்படுத்திக்கொள்ள  வேண்டும், பலப்படுத்திக்கொள்ள வேண்டும்,நமது மனதில் தோன்றும் எண்ணங்களே, எல்லாவற்றிர்க்கும் அடிப்படை என்கிறார் வேதாத்திரி மகரிஷி. எண்ணம் பற்றி தனது வழக்கமான "எளிய" பாணியில் பின் வருமாறு கூறுகிறார் :

"எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும் உயர்வும் அமைகின்றன. மனத்தின் அளவில் தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்டவும் வேண்டும்.

எண்ணத்தை ஆராயவேண்டுமென்றால், எண்ணத்தால்தான் ஆராய வேண்டும். எண்ணத்துக்குக் காவலாக எண்ணத்தையே வைக்க வேண்டும். எண்ணத்திற்கு நீதிபதியாகக் கூட எண்ணத்தைத் தான் நியமித்தாக வேண்டும். ஏனென்றால், வேறு ஆள் இல்லை. மேலும், வேறு யாராலும் இக்காரியங்களை முடிக்க முடியாது. காரணம் ஒருவரது எண்ணத்தை அறிந்து கொள்ள அவருடைய எண்ணத்தைத் தவிர வேறு யாராலும் முடியாதே!

எண்ணம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் தற்சோதனை என்ற அகத்தாய்வு (Introspection). அந்த அகத்தாய்வை வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என்று அவ்வப்போதும் செய்ய வேண்டும், கணத்துக்குக் கணமும் செய்ய வேண்டும். அப்போது தான் குணநலப்பேறு வரும். முழுமைப்பேறு வரும்".



கொசுறு :டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்

Saturday, 18 May 2013

பாவமும் புண்ணியமும்!

ஒரு ஊரிலேபத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் மின்னுவதும்  இடி இடிப்பதும் நிற்கவில்லை.  பயத்தால்  நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
மற்றவர்களும்இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேருக்குள் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன்படி  ஒருவொருவரும் தத்தம் தலையிற் கட்டியிருந்த தலைப்பாகையைக் கையிற் பிடித்துக் கொண்டு மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தலைப்பாகையை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் மின்னியது. அதில் விவசாயி ஒருவரின் தலைப்பாகை மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்றையஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. முதலில் இவனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேற் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறித் தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர்கள்  எவரும் அதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை. அவனின்  கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாக வெளியே தள்ளினர். 
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் மின்னி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே நின்று விட்டான். சற்று நேரத்தின் பின்  சுயநிலைக்குத் திரும்பிய  அவன் மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து, மண்டபம் முழுவதும் நொருங்கிக் கிடந்தது. ஒன்பது விவசாயிகளும் பரிதாபமாக உடல் கருகிச் செத்துப் போயிருந்தனர்.
பாவமும் புண்ணியமும் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வது இதுதான் :
"நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.
பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவுகளைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.
புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.
பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவிப்ப தாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்."

கொசுறு:


பாவியே ! உன்னோட கடைசி ஆசை என்ன?

என்னைத் தூக்கில் போடுவதை வீடியோவில் எடுத்து எனக்கு போட்டுக் காட்டணும்! 

நமக்குச் சொந்தம்?




குரு ஒருவர் ஞான மார்க்கத்தைப் போதித்து வந்தார்.
அவரிடம் ஆன்மீக அனுபவம் வேண்டி ஐந்து சீடர்கள் அவரது ஆசிரமம் தேடி வந்தனர்.
குரு அவர்களிடம் "நீங்கள் தண்ணீர் அருந்துவதற்கு அவரவர் வீட்டிலிருந்து ஒரு செம்பை மட்டும் எடுத்து வாருங்கள், மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆசிரமத்தில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் குரு கூறியது போல் ஒவ்வொரு சீடரும் செம்பு ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
குருவின் ஆன்மீக உணர்வும் அனுபவமும் சீடர்களுக்கு இறையுணர்வு பெறுவதற்கு உதவியாய் இருந்தது.குருவின் ஆன்மீகக் கல்வியும் வழிகாட்டலும்  அவர்களது சுய சிந்தனையைத் தூண்டியது.அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் குருவின் முயற்சியில் சீடர்களும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டனர்.சில வருடங்களில் ஐந்து சீடர்களும் குரு கற்றுத்தந்த ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.குருவைத் தேடிவரும் அன்பர்கள் அனைவரும்  ஐந்து சீடர்களையும் மதித்துப் போற்றி வந்தனர்.தேவையான சந்தர்ப்பங்களில் ஞான மார்க்கத்தை, ஆசிரமம் வரும் அன்பர்களுக்கு சீடர்கள் போதிக்கத் தவறுவதில்லை.
குரு முதுமையடைந்தார்.
தனது ஆயுள் முடிவடையும் நேரம் நெறுங்குவதை உணர்ந்தார். தனக்குப் பிறகு யாருக்குப்  பொறுப்பை ஒப்படைப்பது? ஐந்து சீடர்களும் எல்லாவற்றிலும் சமமானவர்கள்.ஆனால்,ஆசிரமப் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பதே முறை.ஆகவே அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார்.
ஐந்து சீடர்களையும் அழைத்து அவர்கள் ஆசிரமம் வரும்போது கொண்டுவந்த செம்பை எடுத்துவரச் சொன்னார்.நான்கு சீடர்கள் அவரவர் செம்பை எடுத்துவந்து குருவின் முன் வைத்தார்கள். 
 ஒரு சீடர் மட்டும் கையில் ஏதும் இல்லாமல் குருவின் காலடியில் வந்து அமர்ந்தார். குரு அந்த சீடரிடம் "நீ மட்டும் செம்பை ஏன் எடுத்துவரவில்லை?" என்று கேட்டார்.அதற்கு அந்த சீடர், "குருவே! இங்கு வந்தபின் உங்களது வழிகாட்டலில் நான், என்னுடையது
என்ற எண்ணமே போய்விட்டது.கொண்டுவந்த செம்பை ஆசிரம
உபயோகத்திற்காக பயன்படுத்தியதால்
நான் கொண்டு வந்தது எது என்றே தெரியாது, பிறக்கும் போது கொண்டுவந்தது எதுவும் இல்லை ஆகவே எனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை" என்றார்.அந்த சீடருக்கே ஆசிரமப்  பொறுப்பை ஒப்படைத்தார் குரு.
மற்ற சீடர்களும் அதை சந்தோசமாய் ஏற்றுக்கொண்டு ஆன்மீகத் 
தேடலில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்தத் தொடங்கினர்.  
  
உலகில் எதுவுமே நம்முடையது இல்லை என்பதை உணர்ந்தால் நாம் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறோம் என்று பொருள். "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையதுஅல்ல!" என்கிற பக்குவம் வரும்போது,
 விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!. 

இதையே வேதாத்திரி மகரிஷி "நான் பிறந்தேன்; வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.ஒரு நாளைக்கு முடியப் போகிறேன்.
இதற்கு மத்தியில் எவ்வளவுதான் இருந்தபோதிலும் கூட, சீரணிக்கக் கூடிய 
அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை;
உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை;
நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு;இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக்கூடியவர்களும் இல்லை.வரும் போது கொண்டு வருவதில்லை.போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை.இந்த உண்மையை அப்படியே  மனதிலே
ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னன்ன
கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும்" என்கிறார்.

கொசுறு :
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு பீலு (feel) 

Sunday, 10 March 2013

நிறை செல்வம்! (Wealth in adequacy)


சுப்பு என்பவர் ஓர் பெரிய செல்வந்தர்.ஆனால் அந்த ஊரில் அவரைக்  கருமி என்றே எல்லோரும் அழைத்தனர்.அதற்குக்  காரணமும் இருந்தது.அவர் பள்ளியில் படித்த போது ஒருமுறை  "கஞ்சன்" என அவரது வாத்தியார் எழுதச் சொன்னார்.'கஞ்சன்' என்றால் நான்கு எழுத்து எழுத வேண்டுமே!, அதே அர்த்தமுள்ள "கருமி" என்ற மூன்றெழுத்தே போதுமென எழுதியவர்தான் சுப்பு.
அன்றிலிருந்து சுப்புவைக்  கருமி என்றே ஊர்மக்கள் அழைத்தனர். 
எப்போதும் கிழிந்த சட்டை அணிந்து செல்வது சுப்புவின் வழக்கம்.ஒருமுறை உறவினர் ஒருவர் அவரிடம்  "செல்வந்தராகிய  நீங்கள், ஏன் கிழிந்த சட்டையுடன் அலைகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "என்னைப்  பற்றித்தான் இந்த ஊரில் எல்லோருக்கும் தெரியுமே!, கிழிந்த  சட்டை போட்டால் என்ன? " என்று கிண்டலாகப்  பதில் சொன்னார் சுப்பு.
இன்னொரு நாள் பட்டணத்தில் சுப்புவைப் பார்த்த வேறொரு நபர் அதே கேள்வியைக்  கேட்டதற்குச் சுப்புவும் "என்னைப்  பற்றி இங்கே யாருக்கும் தெரியாதே!,கிழிந்த சட்டையை நான் ஏன் போடக்கூடாது?" என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார்.
செலவு செய்யாமல் செல்வம் சேர்ப்பதில் சுப்பு பெரிய கில்லாடி.தனது கல்யாணத்திற்குச்  செலவே செய்யாமல் மண்டபமோ விருந்தோ ஏற்பாடு செய்யாமல் நடத்தி அசத்தியவர். இப்படிப் பட்டவருக்கு அருளே வடிவான மனைவி வந்து வாய்த்தாள்.தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தைத், தன்  குடும்பத்திற்குக்  கூடச் செலவு செய்யாமல் கருமித்தனமாகச் சேமித்து வைத்திருந்த சுப்புக்கு  இளமையிலேயே  நோயும் முதுமையும் அழைக்காமலேயே தேடி  வந்தது.
அவரது மனைவி புத்திகூர்மையுடையவள்.கணவரை அனுசரித்து நடந்து
கொள்பவள்.ஆனால் பண விசயத்தில் சுப்புவிற்கு நேரெதிராகவே செயற்பட்டு வந்தாள்.
உதவி கேட்டு வருவோருக்கு இல்லையென்று சொல்லாமல்
இருப்பதைக் கொடுக்கும் சுவாபம் உள்ளவள்.
சுப்புவிற்கு அவளின் தயாள குணமும் இல்லாதவர்களிடம் அவள் காட்டும்பரிவும் அறவே பிடிப்பதில்லை.
சுப்புவிற்குத்  தீராத நோய் வந்தபோது கண்ணும் கருத்துமாய் அவரைக்
கவனித்துக்கொண்டாள். அவர் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்துவிட்டபின்பு  நான் சம்பாதித்த பணம் முழுவதையும்  என் கூடவே எடுத்துச்  செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்றார். தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ஏழைகளுக்குத்  தானமாகக் கொடுத்துவிடுவாளோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். பணம் முழுவதையும் சவப் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என 
உறுதிமொழியும் வாங்கிக் கொண்டார். கணவனின் கடைசி ஆசையை  நிறைவேற்றுவதுதானே  மனைவியின் கடமை?. 
நோயின் தீவீரத்தால் சுப்பு விரைவிலேயே இறந்துபோனார். சவத்தை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின. சவப்பெட்டியை மூடுந் தறுவாயில் அந்தப் புத்திசாலி மனைவி, “கொஞ்சம் பொறுங்கள்  எனக் கூறியவண்ணம் அறைக்குள்ளே ஓடிச்சென்று  ஒரு துணிப் பையை எடுத்து வந்து சவப் பெட்டிக்குள்  வைத்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் சுப்புவின்  கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவளது  தோழி “நீயும் முட்டாள்தனமாகச்  சுப்பு சொன்னது போலவே  செய்து விட்டாயா?” என்று கேட்டாள்.அதற்கு சுப்புவின் மனைவி,”அவரிடம்  சவப்பெட்டியினுள் முழுப் பணத்தையும் வைப்பதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்?.

அவரது  சேமிப்புகள்  சொத்துக்கள்   அனைத்தையும் பணமாக்கி என்னுடைய
வங்கிக் கணக்கிலே போட்டு விட்டேன்.வங்கியில் உள்ள முழுத்தொகைக்கும் காசோலை ஒன்றை  எழுதி அதைத் துணிப்பைக் குள்ளே இட்டுச் சவப் பெட்டியில் வைத்து விட்டேன்.அவர் போகும்  இடத்தில் காசோலையை மாற்றி  எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”என்றாள்."அந்தப் பணத்தை உயிருடன் இருக்கும்போதே சுப்பு அனுபவிக்கவில்லை, இறந்தபின் அந்தப் பணம் அவருக்கு  உதவும் என்றா நினைக்கிறாய்?" என்றாள்.
தொண்டுள்ளம் கொண்ட சுப்புவின் மனைவி  கணவன் விட்டுச் சென்ற சொத்து அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்கும்  தான தருமங்கள் செய்வதற்கும்  பயன்படுத்தினாள்.
அதே நேரத்தில் செல்வத்தை நல்வழியில் ஈட்டும் பணியிலும் ஈடுபட்டாள். 
சுப்புவைப்போல்  உடலை வருத்தித்  தேவைக்கு அதிகமாய்ப் பொருள் சேர்த்துச்  செல்வந்தர் போல் வலம் வருவோர்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள்.செல்வம்மட்டுமே வாழ்க்கையல்ல என வேதாத்திரி மகரிஷி விளக்கும்போது, 
"இக்காலத்தில் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும்,மிகப் பலர் ஏழைகளாகவும் 
இருப்பதனால் செல்வத்திற்கு மதிப்பு இருக்கிறது.
எல்லோரும் செல்வந்தர்களாகிவிட்டால் செல்வத்திற்கு மதிப்பு எப்படி ஏற்படும்?..நீங்கள் எவ்வளவோ செல்வங்களைச் சேகரித்து
வைத்து இருக்கிறீர்கள்.உங்கள் எதிர்கால வாழ்வைப் பற்றி உறுதியாகவும் 
கவலையற்றும் இருக்க முடிகிறதா?ஏன் முடியவில்லை?எப்படி முடியும்?
நீங்களும் மனிதர்கள்தானே ! எண்ணிறைந்த மக்கள் வறுமையின் காரணமாக
எண்ணங்களைச் சிதறவிட்டு வருந்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் 
எல்லோருடைய  வாழ்க்கைப் போராட்டக் கவலைகள் உலகில் யாரைத்தான்
நிம்மதியாக,அமைதியாக இருக்கச் செய்யும்?இந்த உண்மையை உங்கள் அறிவிலே பதித்துக் கொள்ளுங்கள்.
உலகில் மனிதனாகப் பிறந்தவர்களில்  ஒருவன் கூட வறுமையில் வாடினாலும்
மனித இனத்தின் வாழ்வில் அமைதி ஏற்படாது.உலகில் பொருளாதாரத்துறையில் மாறுதலை ஏற்படுத்தச் செல்வந்தர்களிடமிருந்து
பணத்தையும் சொத்துகளையும் பிடுங்கி அனைவருக்கும் பங்கு போட்டு
கொடுத்துவிட வேண்டியதில்லை.அப்படிச் செய்வது தவறான பாதையாகும்.
செல்வந்தர்களாக இருப்பவர்களும் மனிதர்கள்தான்.அவர்கள் மனம் வருந்தவும், அவர்களின் எதிர்கால வாழ்வில் துன்பங்கள் அதிகரிக்கவும் செய்வது மனித தர்மத்திற்கு ஏற்றதல்ல.நாம் கோரும் பொருளாதார சீர்திருத்தம் செல்வந்தர்களை ஏழைகளாக்கி விடுவதல்ல.மக்கள் சுகமாக வாழ வேண்டுமெனில் பணம் மட்டும் இருந்தால் போதாது.வாழ்க்கைப் பொருள்களும் அவற்றைப் பகிர்ந்து   நிரவியனுபவிக்கும் பொது நோக்கமும் தேவை." என்கிறார்.
கொசுறு :
பணம் உள்ளவனுக்குக்  கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்குப்  பணம் அவசியமில்லை

Friday, 1 March 2013

காயகல்ப யோகம்!(Kayakalpa Yoga)


ஒரு ஊரில் குடியானவன் ஒருவன், மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
அவன் தினமும் தனது வயலுக்குச் சென்று விவசாய வேலைகளைச் செய்து வருவான்.வயலுக்குச்  செல்லும் வழியில் இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ்  சித்தர் ஒருவர் அமர்ந்திருப்பதைப் தினமும்பார்ப்பான்.அவர் எப்போதுமே கண் 
மூடித்  தியானத்தில் மூழ்கியிருப்பார். குடியானவன் அவரைத் தினமும் மரியாதை நிமித்தமாக வணங்கிவிட்டு வயலுக்குச் செல்வது வழக்கம்.குடியானவனைப்  
போல் அந்தப் பாதை வழியாகச் செல்வோர், சித்தரை வணங்கிவிட்டுச்  செல்வது வழக்கமாகிவிட்டது.
சித்தர் தவநிலையில் இல்லாமல் இருந்ததைக் குடியானவன், ஒருநாளும்
பார்த்ததில்லை.ஒரு நாள் சித்தர் கண்களைத்   திறந்து தேகப்பியாசம்  செய்து
கொண்டிருப்பதைக் குடியானவன் கவனித்தான்.சித்தருக்கு வணக்கம் செலுத்தி
விட்டுச்,"சித்தர் பெருமானே,  நீங்கள் கண் திறந்திருப்பதையோ, ஆகாரம் உட்கொள்வதையோ, உறங்குவதையோ,ஓய்வு எடுப்பதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.எப்படி உங்களால் இப்படி அன்னம்  ஆகாரமின்றி,உறக்கமின்றி,
ஓய்வு இல்லாமல் தவ நிலையிலேயே இருக்க முடிகிறது" என்று கேட்டான்.
அதற்குச், சித்தர்," உழவுத் தொழில் செய்து மற்றவர் பசி போக்கும் ஐயனே!,
நான் நெடுங் காலமாக  யோகம் பயின்று கொண்டிருக்கிறேன், அதில் 'லம்பிகா' என்ற யோகப்  பயிற்சி உண்டு.'லம்பிகா' யோகத்தை அனுசரித்தால், நெடு நாட்கள் வரை  உணவு தேவையிருக்காது, நாம் மூச்சு விடுவதைக்  கூட மற்றவர்களால் உணர முடியாது" என்று சொன்னார்.
இதைக் கேட்ட குடியானவனுக்கு 'லம்பிகா'யோகம் பயில்வதற்கு ஆர்வம் பிறந்தது.
"சித்தர் பெருமானே!, எனக்கு லம்பிகா யோகம் கற்றுத்தருகிறீர்களா,
கற்றுக்கொள்வதில்  ஆர்வமாய் இருக்கிறேன்" என்றான்.
இதற்குச்  சித்தர் "ஐயனே!, இது ஒரு கடுமையான பயிற்சி, நிறைய பொறுமை வேண்டும், உன்னைப் போன்று இல்லறத்தில் ஈடுபடுவோருக்கு  இது  அவசியமா என்பதையறியேன்" என்று சொன்னார்.
சித்தர் பல தடவை எடுத்துக் கூறியும் குடியானவன், 'லம்பிகா'யோகம் கற்றுக்   கொள்வதில் உறுதியாய் இருந்தான்.
வேறு வழியில்லாமல் சித்தரும் சம்மதம் தெரிவித்துப், பயிற்சியை ஆரம்பித்தார்.சில வருடங்களில் குடியானவன் 'லம்பிகா' யோகம் கற்றுத்  தேர்ச்சியடைந்தான்.
தான் பயின்ற 'லம்பிகா' யோகத்தை வீட்டிலேயே செய்ய எண்ணினான் 
குடியானவன்.ஒருநாள் வீட்டிற்குள் அமர்ந்து யோக நிலை எய்தி அன்னம்
ஆகாரமின்றி மூச்சில்லாமல் தவ நிலையில் அமர்ந்திருந்தான்.
கணவனைத் தொட்டுப்பார்த்த குடியானவனின் மனைவி அவன் மூச்சிலாமல் 
இருப்பதை அறிந்து, கணவன்  இறந்துபோனான் என எண்ணினாள்.
உற்றார் உறவினர்களை அழைத்து, இறுதிக்  கிரியைகளைச்செய்வதற்கு 
ஆயத்தமானாள்.

குளிப்பாட்டி, வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த இருந்த பாடையில் வைப்பதற்காகக் குடியானவனின் உடலை அவனது நெருங்கிய உறவினர்கள் தூக்கிச் சென்றார்கள்.அப்போது வாசலில் 
வைக்கப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலின் முனை குடியானவனின் காலைத் தட்டியது.
உடனே குடியானவன் தவத்திலிருந்து விழித்து  எழுந்தான்.
எல்லோரும் ஆச்சர்யப்பட்டர்கள்.குடியானவன் உயிருடன் இருப்பதை 
அறிந்த உறவினர்கள் தத்தம் வீடுகளுக்குச்  சென்றனர்.
சில வருடங்கள் சென்றபின் குடியானவனுக்கு மறுபடியும் 'லம்பிகா' யோகம் பற்றிய எண்ணம் தோன்றியது.
முன்பு போலவே வீட்டின் நடுப்  பகுதியில் தவ நிலையில் அமர்ந்தான்.இம்முறையும் குடியானவனின் பேச்சுமுச்சற்ற 
நிலையைக் கண்ட மனைவி, கணவன் இறந்து போனான் என 
உறவினர்களுக்கு அறிவித்தாள்.உறவினர்களும் இறுதிக்கிரியைகளைச் செய்ய 
குடியானவனின் வீட்டில் கூடினார்கள்.
உடலைக் குளிப்பாட்டிய பின் அதைத் தூக்குவதற்கு ஆயத்தமானார்கள்.

அப்போது பதற்றத்துடன் குடியானவனின் மனைவி ஓடி வந்தாள்.குடியானவனின் உடலைத் தூக்கும் உறவினர்களைப்
பார்த்து அழுது கொண்டே," இம்முறை கயிற்றுக்கட்டிலின் முனை படாமல் 
கவனமாக உடலைத்  தூக்கிச் செல்லுங்கள், சென்ற
முறை எழுந்தது போல் இம்முறையும் எழுந்துவிடப் போகிறார்"  என்றாள்.
  
"லம்பிகா" யோகம் போன்ற கடுமையானப்  பயிற்சி இன்றைய வாழ்க்கை 
முறைக்கு அவசியமா? என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.
நமது வாழ்வு சிறக்க "உடல் நலத்திற்கு தேவையான எளிமையான உடற்பயிற்சி,
மன நலத்திற்குத் தேவையான தவப் பயிற்சி, உயிர் நலத்திற்கு
தேவையான  காயகல்பப்  பயிற்சி"  இவை மூன்றும் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. காயகல்பம் யோகம் பற்றி வேதாத்திரி மகரிஷி,   
"முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்தும் வந்தார்கள்.வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக "முப்பு" என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் "முப்பு" என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடங்கள் 500 வருடங்கள் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே 'லம்பிகா' யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும்.'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் 'லம்பிகா' யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் 'லம்பிகா' யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல் தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடிய பயிற்சியே  'காயகல்ப யோகம்' “ என்கிறார்.
காயகல்பம் என்பது உணவு முறையோ மருந்தோ அல்ல.து ஒரு யோகப் பயிற்சிமுறை. 


கொசுறு:
நேயாளியின் மனைவியைத்  தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆயிருக்கு, இனிமே ரெம்பக் கவனமா பார்த்துக்கணும், குறிப்பா அதிர்ச்சி தரும் விசயங்களைச்  சொல்லக்  கூடாது, இனி அவர் அதிக நாள் உயிர் வாழறது உங்க கையிலதான் இருக்கு" என்றார்.   
போகும்போது கணவன் கோட்டான், ஆமா, “டாக்டர் உன்கிட்ட தனியா ஏதோ சொன்னாரே அது என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் விசயமாத்தான் இருக்கும், மறைக்காம சொல்லு” 
"ஒண்ணுமில்ல, நீங்க சாகப்போறீங்களாம்" 



மேலுள்ள கதை/கட்டுரையை  ஒலி  வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே  கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம்  கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.