Thursday, 3 January 2013

ஐவகைப் பற்று!


குரு ஒருவர் ஆசிரமம் ஒன்றை அமைத்து அதிலே ஆன்மீகப் பணி புரிந்து வந்தார்.அவரது ஆன்மீக அறிவும் அனுபவமும் பலருக்கு
வழிகாட்டுதலாய் இருந்தது.
அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் தினமும் வருகை தருவார்கள்.இப்படியிருக்கையில் அவரது சீடர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.அந்த சீடர் குருவிடம்
"குருவே. எனக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதுபற்றி தங்களிடம் கேட்கலாமா?" என்றார்.
"தாராளமாய் கேள்" என்றார் குரு.
"குருவே, தங்களைக் காணத் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகிறார்களே! பெரும்பாலானோர் தங்களது சொந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கையில்
இங்கு வருகிறார்கள்.வெகு சிலர் மட்டுமே ஆன்மீக நாட்டம் கொண்டு இங்கு வருகிறார்கள்.
அவர்களில் ஆன்மீகச் சிந்தனையிலே, நாட்டம் உள்ளவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறீர்கள்?" என்று கேட்டார் சீடர்.
உனக்கு இது பற்றி எளிமையாய் விளக்குகிறேன் என்ற குரு
"நான் இப்போது சொல்லும் கேள்வியை நாளை என்னைக் காண வரும் எல்லோரிடமும் கேள்" என்றார்.
"குருவே !என்ன கேள்வி அது" என்றார் சீடர்.
"உலக அமைதி நிமித்தம், குரு பாத யாத்திரையாகக் கிராமம் கிராமமாக மாவட்டம் முழுவதும் செல்ல இருக்கிறார்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டுத் தவமும் அறநெறி விளக்கக் கூட்டமும்
நடத்துவார்.
ஆசிரமம் வருவதற்குச் சிறிது காலம் ஆகும். குருவுடன் செல்லத் தயாராய் இருப்பவர்கள், தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம்.
யார் யார் வர விரும்புகிறீர்கள்? என்று கேள்" என்றார் குரு.
மறுநாள் காலையில் ஆசிரமம் வந்து குருவைச் சந்தித்தவர்களை சீடர் தனியே அழைத்துக் குரு சொன்ன கேள்வியை ஒவ்வொருவரிடமும் கேட்டார்.
அதற்குச் சிலர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்றனர். சிலர் தங்களின் வேலை நிமித்தமாய் வெளியூருக்குப் போவதாகச் சொல்லியபின் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.சிலர் தங்களுக்கு "வயல் வேலை இருக்கிறது - அது முடிந்த பிறகு குருவுடன் வரலாம்" என்று நடையைக் கட்டினர்.சிலர் "வீட்டின் கட்டிட வேலை முடியவில்லை" என்றும் "அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது" என்றும் கூறிவிட்டு விலகினர். இப்படி எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி, இடத்தை விட்டுச் சென்றனர். ஒரே ஒருவர் மட்டும்தான் தான் பாதயாத்திரைக்குக் குருவுடன் செல்லத் தயார் என்று கூறினார்.
சீடரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரைக் குருவிடம் அழைத்துச் சென்றார்.குரு அவரின் குடும்ப விவரங்களை விசாரித்தார். அவரும்,குருவிற்கு மரியாதை செலுத்திவிட்டு "நான் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறேன்.எனக்கு மனைவி குழந்தைகள் எனக் தனிப்பட்ட கடமை இருந்தாலும், உலக அமைதி எனும் சமுதாயத் தொண்டு அதிமுக்கியம் என உணர்கிறேன்.அதற்காக முடிந்த அளவு நேரம் ஒதுக்குவதைக் கடமையாகக் கருதுகிறேன், ஆகவே நானும் பாத யாத்திரைக்கு
உங்களுடன் வரவிரும்புகிறேன்" என்றார்.
குருவும், "மிக்க மகிழ்ச்சி. உங்களை நான் எப்பொழுது அழைத்தாலும் வருவீர்கள் அல்லவா? நான் பாதயாத்திரை செல்லும் போது தங்களை அழைத்துப் போகிறேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
குரு சீடரை அழைத்து, "உலக அமைதிக்கான பாதயாத்திரையில் கலந்துகொள்ள விருப்பமில்லாதோர் பலர், வருவேன் என்று சொன்னவர் ஒருவர் மட்டுமே.என்னிடம் வரும் மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாதயாத்திரைக்கு வரமுடியாது என்று சொன்னவரெல்லாம் மாம்பழம் போன்றவர்கள். இன்னுமும் உலக ஆசைகளும், பற்றுக்களும் அவர்களோடு ஒட்டியுள்ளன. அவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பது சற்றுக் கடினம்.மனிதரில் அதிகப்படியானோர் இந்த வகைதான். எவ்வளவுதான் அனுபவங்கள் பெற்றாலும், மீண்டும், மீண்டும் உலக ஆசைகளில் மூழ்கியே இருப்பார்கள்.தான் தனக்கு என்னும் குறுகிய எண்ணத்திலேயே வாழ்நாளைத் தொலைத்து விடுவர்.பொருள்,மக்கள் மற்றும் புகழ் மீது பற்று கொண்டு கடைசிவரை அதிலேயே திளைத்து வருந்துவர்.
பாதயாத்திரைக்கு வருகிறேன் என்று சொன்னவரோ விளாம்பழம் போன்றவர். விளாம்பழம் பழுக்கும் வரை ஓட்டோடு ஒட்டியிருக்கும்.பழமான பின்பு ஓட்டோடு சேராமல் தனித்து நிற்கும்" "பற்றை அறுக்க துணிந்தவர் அவர்" என்றார் குரு.
நாம் மாம்பழமா? விளாம்பழமா?
ஐவகைப் பற்றுக்கள் பற்றி வேதாத்திரி மகரிஷி கூறுகையில்,
"எல்லையற்ற அருட்பேராற்றலின் ஒரு பகுதியே ஒவ்வொரு மனிதனும் என்ற உண்மையினை உணர்ந்து அதனை மறவாமல் இருக்கவும், பழகிக் கொள்ளவும் வேண்டும். அகன்ற பேராற்றலை மறவாத விழிப்போடு உலக வாழ்வை நடத்தும் போதுதான், பற்றி நிற்பதிலும் பற்றின்மை என்ற தகைமை மனிதனுக்கு உண்டாகிறது.
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை. நீரில் குளிப்பது தேவை தான். ஆனால் நீரில் மூழ்கிவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்க்கைக்கு பலவகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்." என்று கூறுகிறார்.



கொசுறு :
பற்றற்றிரு! சாமியார் பேச்சுக்கு மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்க்ஷன் அரைக் கோடி!


No comments:

Post a Comment