Tuesday, 8 January 2013

சமுதாயக் கடமை!(Social Responsibility)



தங்கமணி  தான் படித்த பள்ளிக்கு வெகு நாட்களுக்குப் பின் சென்றான்.
கடந்த ஏழு  ஆண்டுகளுக்குள் எத்துனை மாற்றங்கள், புதிய கட்டடங்கள், புதிய மைதானம்,புதிய ஆராய்ச்சிக் கூடம்.அவனால் நம்பவே  முடியவில்லை.
அவனுக்கு கோபமும் ஆத்திரமும்  வந்தது.இவையனைத்தும்   என்னைப் போன்று மாணவர்களிடமிருந்து அதிகப்படியாய் வசூலித்து கட்டியதுதானே?.
இவர்களுக்குத்  தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இப்படிப்  பல எண்ணங்கள் அவன் மனதிலே ஓடியது.அனுமதி பெற்று தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தான் அவன்.
தலைமை ஆசிரியருக்கு மரியாதை நிமித்தமாய் வணக்கம் தெரிவித்தான்.
முதல் பார்வையில் அவனை அடையாளம் தெரியாமல் இருந்தாலும், 
தன்னிடம் பயின்ற மாணவன்தான் என ஞாபகப்படுத்திக் கொண்டார்.
எதிரில் இருந்த  இருக்கையில் அவனை அமரச் சொன்னார்.
"பத்தாம் வகுப்பில் நீங்கள்தான் எனக்கு கணக்குப் பாடம் நடத்தியது"
என்ற அவன் சொன்ன போது தலைமை ஆசிரியர் "ஒ!அப்படியா"
என்று ஆர்வமாய் கேட்டுக் கொண்டார்.அவன் அந்தப்பள்ளியில் படிக்கும்போது அவர் வெறும் கணக்கு வாத்தியார் மட்டும்தான்.
தங்கமணி பள்ளிக்கு வந்த விபரம் கூறினான்.
அவன் சொன்னான், ஐயா! இந்தப் பள்ளியில் படித்தபோது நான்  ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை.ஆசிரியர்கள் யாரும் உருப்படியாய் பாடமும்  நடத்தவில்லை.
இதுவரை என்னுடைய அறிவில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.பள்ளியில் படித்தது எந்த வகையிலும் உபயோகமாய் இல்லை.
படிக்கும் கல்லூரியிலும் இதனால் பிரச்னை.எல்லாவற்றிற்கும் பள்ளிதான் காரணம் என்றான்.   
கேட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு அவனது குற்றச்சாட்டு  அதிர்ச்சியும்,வியப்புமாய் இருந்தது.
அவன் மேலும் தொடர்ந்தான்,உபயோகமில்லாத கல்வியை பல வருடங்கள் 
கற்றுக் காலத்தையும்,அதிகப்படியான பணத்தையும் 
இழந்துவிட்டதாகவும்,பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும்இதற்குப்
பொறுப்பேற்று தகுந்த நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறித் தனது பேச்சை நிறுத்தினான்.
தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் ஆனது.
சுதாரித்துக்கொண்டபின் இவனுக்கு பையித்தியம் பிடித்துவிட்டதா?
 என எண்ணி, தங்கமணி நீ கூறுவது புதினமாய் உள்ளதே, நான் இது போன்ற 
குற்றச்சாட்டை இதுநாள் வரைக் கேள்விப்பட்டதில்லை என்றார்.
அவன் சொன்னான், ஐயா, நான் கூறுவது முற்றிலும் உண்மை இதை 
யார் முன்னிலையிலும் நிரூபிக்கத் தயார் என்றான்.
 உடனே,தலைமை ஆசிரியர் தங்கமணிக்கு பள்ளி இறுதியாண்டில் பாடம் நடத்திய மற்ற ஆசிரியர்கள் அனைவரையும் அவரது அறைக்கு அவசரமாய் வரச் செய்தார்.
தங்கமணியின் குற்றச்சாட்டை அவர்களிடம் விவரித்தார்.
குற்றச்சாட்டைக் கேட்ட  ஆசிரியர்  அனைவரின் முகமும்  இறுகிப் போனது.
தலைமை அசிரியருக்கு ஒரு உபாயம் தோன்றியது.அவர் சொன்னார், தங்கமணி "நீ சொல்வதை எங்கள் ஒருவராலும் ஒப்புக் கொள்ள இயலாது.
நாங்கள் உனக்கு நடத்திய எல்லா பாடங்களிலும்  தேர்வு  
வைக்கிறோம்.ஒவ்வொரு பாடத்திலும் பத்து வினாக்கள் கேட்கப்படும்.அதில் நீ ஏதாவது ஒன்றில் "PASS " பண்ணினாலும், 
உன்னுடைய கூற்றை நீ திரும்பப் பெற வேண்டும்.
அனைத்துப்  பாடங்களிலும்  நீ "FAIL" ஆனால் உனக்கு நஷ்ட ஈடு கொடுக்க
ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
மற்ற ஆசிரியர்களும், அரை மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

"இந்தக் கணக்கு வாத்தியின்  சிந்தனை எப்போதுமே முக்கோணம் போன்று கோணல்தான்" என்று  மனதுக்குள் எண்ணிக் கொண்டனர்.
தங்கமணி தேர்வு எழுத சந்தோசமாய் ஒப்புகொண்டான்.
தலைமை ஆசிரியர் மற்ற  ஆசிரியர்கள் அனைவரையும் தனி  அறைக்குள்   
அழைத்துச் சென்றார்.தேர்வுக்கான வினாக்கள் மிக மிக எளிதாக இருக்க
வேண்டும் என்றும் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் 
பெறுவதற்கு தங்கமணிக்கு எந்தச் சிரமமும்இருக்கக் கூடாது 
என்பதையும்  தெரிவித்தார்.
ஆசிரியர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.மிக மிக எளிதான வினாக்களாக தெரிவு செய்து வினாத்தாள்களைத் தயாரித்தனர்.
முதலில் தமிழாசிரியர் தனது வினாத்தாளுடன் தங்கமணி  இருந்த அறைக்குள் நுழைந்தார்.
தங்கமணியும் தமிழாசிரியரை எதிர்கொள்ளத்  தயாரானான்.
ஐந்தாம் வகுப்புப்  படிக்கும் மாணவனும் எளிதில் பதில் சொல்லும் வண்ணம் பத்து வினாக்களை வடிவமைத்திருந்தார் அவர்.
திட்டமிட்டபடி தங்கமணியிடம் வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
வினாக்களுக்கான விடை அனைத்தும்   தெரிந்திருந்தும் தவறாகவே
பதில் எழுதினான்.
எழுதி முடித்ததும் விடைத்தாளை தமிழாசிரியரிடம் கொடுத்தான்.
அவன் எழுதிய விடைகளுக்கு  அவரால் நூற்றுக்கு பத்து மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடிந்தது.
தங்கமணி தமிழ்த்  தேர்வில்"FAIL " எனத் தமிழாசிரியர் அறிவித்தார்.
தங்கமணி தலைமை ஆசிரியரிடம்  சொன்னான், 'ஐயா! முன்னமே நான் கூறினேன், எனக்கு ஆசிரியர்கள் யாருமே சரியாகப்  பாடம் நடத்தவில்லையென்று, பார்த்தீர்களா,
தேர்ச்சிபெறத் தேவையான மதிப்பெண்கள் கூட என்னால் பெற முடியவில்லை.எனது  குற்றச்சாட்டை  இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா? என்றான்.அடுத்து,ஆங்கில வாத்தியார் வந்தார்.பத்து வினாக்கள் அடங்கிய வினாத்தாளை  தங்கமணிக்குக் கொடுத்தார்.முன்பு போலவே தவறாகவே அனைத்து வினாக்களுக்கும்
பதில் எழுதினான்.அவரும், அவன் தேர்ச்சி பெறவில்லை என அறிவித்தார்.அறிவியல் 
ஆசிரியரும், வரலாற்று ஆசிரியரும் அவர்கள் வைத்த, தேர்வில் தங்கமணி 'தேர்ச்சி பெறவில்லை'  என்றே அறிவித்தனர்.
தங்கமணிக்கு சந்தோசம் தாங்கவில்லை.இனி கணக்குத்  தேர்வு ஒன்றுதான் பாக்கி.தலைமை ஆசிரியர் சொன்னார், தங்கமணி நாங்கள் தொற்றுப் போனோம்,
நீ இதுவரை நடந்த தேர்வில் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை, உனக்கு நஷ்டஈடு கொடுப்பதே முறை என்றார்.
'எனது  குற்றச்சாட்டு உண்மை என இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே அதுவரை சந்தோசம்' என்றான் அவன்.
தலைமை ஆசிரியர்,தங்கமணி, " நீ  வகுப்பு வாரியாக செலுத்திய பள்ளிக் கட்டணம் மற்றும் இதர செலவு விபரங்களை  எழுதிக்கொடு", நஷ்டஈடு வழங்க அது உதவியாய் இருக்கும் என்றார்.
சந்தோசமாய் அவனும்,  முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செலுத்திய கட்டண விபரங்களைப்  பட்டியலிட்டான்.
வந்த வேலை சுலபமாய் முடிந்ததை எண்ணி மனதுக்குள் ஆனந்தமும்
அடைந்தான்.அவன் எழுதிய தாளை வாங்கிப் படித்த  தலைமை ஆசிரியர்
 குதூகலத்தில் கத்தினார் " தங்கமணி, நான் உனக்கு வைத்த கணக்குத் தேர்வில் 'நூற்றுக்கு நூறு மதிப்பெண்' வாங்கியிருக்கிறாய், ஒவ்வொரு வகுப்பிலும் கட்டிய கட்டணம் ஒன்றுவிடாமல் புத்தகம் மற்றும் இதர செலவு கணக்குகளைப் பிழையில்லாமல் துல்லியமாக எழுதியிருக்கிறாய், 
ஆகவே நாங்கள் கற்றுக் கொடுத்ததில் எந்த தவறும், குறையும் இல்லை"என்றார்.
இதைக் கேட்ட மற்ற ஆசிரியர்களும் தப்பித்தோம் என நிம்மதியடைந்தனர்.
தங்கமணி பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து  நகன்றான்.
சமுதாயத்தில் நிறைய "தங்கமணிகள்" இருக்கிறார்கள். இன்றையச் சூழலில், நான் எனது குடும்பம் என்கிற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது.நாம் வாழும் சமுதாயம்
பற்றிய கடமையுணர்வு சிஞ்சித்தும் இல்லை.பள்ளிக்கும், கோயிலுக்கும்  பொது இடங்களுக்கும் நன்கொடையாய் கொடுக்கும் மின்சார விளக்கின் வெளிச்சமே தெரியாத அளவிற்கு
'உபயம்' என்று அவரவர்  பெயரை எழுதி விடுகிறோம்.
கொடுத்த நன்கொடைக்காக நமது பெயரைக்  கல்வெட்டுக்களில் பதிப்பது, அன்பளிப்பு என்று வழங்கும் புத்தகங்களில் பெயரை எழுதுவது..... இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
தான்,தனது குடும்பம் தாண்டி சமுதாயத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது.அதை நாம் மறந்து விடுகிறோம்.படிக்கும் பள்ளியாக  இருக்கலாம், கல்லூரியாக இருக்கலாம்,
பொது நூலகமாக இருக்கலாம்,பஞ்சயத்தாக இருக்கலாம்,பொது விளையாட்டுக் கூடமாக இருக்கலாம், இது போன்ற பொது அமைப்புகளிலிருந்து பலன் அடைவது எப்படி?,வாழ்வின் பெரும்பகுதி  இதற்காகவே செலவிடுகிறோம்.
வரிப்பணம் (TAX RETURN ) கணக்கு காட்டுவதில், அரசாங்கத்திடமிருந்து,
கட்டிய வரிபணத்தைத் எப்படித் திரும்பப் பெறலாம் என்பதில்தான் நமது முழு கவனமும்  உள்ளது.
எத்துனை பேர்  TAX RETURN  பதிவு பண்ணும்போது நியாயமாய்
நடந்துகொள்கிறோம்?, நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டிய 
நேரமிது.எதைக் காட்டி அரசாங்கத்திடமிருந்து சலுகை பெறலாம்? இது தான் நமது சிந்தனையே?.பள்ளி,கல்லூரிகளில்  
கட்டணம் கட்டும்போது எத்துனைபேர் சந்தோசமாய் பணம் 
கட்டியிருக்கிறோம்?.
பள்ளியிலிருந்து நமது குழந்தைகள் கொண்டுவரும் நன்கொடைச் சீட்டுக்களை மதித்து பணம் வழங்கியிருக்கிறோமா?.
பலனை எதிர் பாராது, நம்மை அங்கமாக கொண்டுள்ள நாம் வாழும்
சமுதாயத்திற்குச்செய்யும் "நிஷ்காமிய கர்மமே" நம்மை உயர்த்தும். 
"ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம். வளர்கிறோம். வாழ்கிறோம், முடிவடைகிறோம். வாழ்கிற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. சொந்தங்கள் அவசியமாகின்றன.
ஆனால் எவரும் பிறக்கின்றபோது எதையும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கின்றபோதும் கொண்டு போவதும் இல்லை.
மனித சமுதாயம்தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.
எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்'' எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி.

 
அவர் சமுதாயக் கடமையுணர்வு  பற்றிக் குறிப்பிடுகையில்
''சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை
வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய்.
குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியுலும் சிறப்படையச் செய்வதும்
சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமைதான்.
ஒரு குழந்தையை நல்லவனாகக் கல்வியில் சிறந்தவனாக உருவாக்கினால் ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு   அளித்து உதவுகிறாய் என்பதுதான் பொருள்" என்கிறார்.


கொசுறு 1 : 

"ஒண்ணுமே தெரியாத  ஸ்டூடென்ட்கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க ...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க....
என்ன கொடுமை சார் இது?...."   

கொசுறு 2 :

டாக்டர், இந்த நோயை  ஆப்பரேஷன் இல்லாம குணப்படுத்த முடியாதா?
முடியாதுப்பா.....
ஏதாவது ஊசி கீசி போட்டு குணப்படுத்திட   முடியாதா டாக்டர்?
முடியாதுப்பா...என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியே ஆகணும்.
  

No comments:

Post a Comment