Friday, 30 November 2012

துறவு!(Reunication)


அமைச்சர் ஒருவர் துறவு மேற்கொண்டு  தனிமையில் வாழ விரும்பினார். அடர்ந்த மலைக் காட்டிட்குள் சென்று ஒரு சிறிய  குடிசை அமைத்துக் கொண்டு  வசிக்கத் தொடங்கினார்.
அங்கேயும் அவரைத் தேடிக்கொண்டு  அந்த நாட்டு அரசன் வந்தான்.அமைச்சர் மீது அரசனுக்கு மரியாதையும் பிரியமும்  அதிகம்.

‘அமைச்சரே, நீங்கள் இப்படித் தன்னந்தனியே காட்டுக்குள் வந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என்றான் அந்த அரசன்.
'நான் உங்களுக்கென்று ஒரு உல்லாச  மாளிகை கட்டித் தருகிறேன். உங்களைச் சகல வசதிகளோடும் வாழவைக்கிறேன். நீங்கள் மீண்டும் ஊருக்குள்ளேயே வந்துவிடவேண்டும்'.

‘அரசே, உன்னுடைய அன்புக்கு நன்றி. எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் துறவியாக வாழ விரும்புகிறேன் அதற்கு இந்த இடம்தான் சரி!,தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மறுத்துவிட்டார்  அமைச்சர்'.

அரை மனத்தோடு அரசன் சம்மதித்தான். அமைச்சரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.


 
பத்தடி நடந்தவுடன் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘அமைச்சரே, இங்கே நீங்கள் வழிபடுவதற்குக் கோவில் ஏதாவது இருக்கிறதா?’

’கோவிலா? அது எதற்கு?’

‘வேறு எதற்கு? சாமி கும்பிடுவதற்குத்தான்!’

‘அதெல்லாம் அவசியமில்லை’ என்றார் அமைச்சர்.

அரசன் முகத்தில் திடீர் வெளிச்சம். ‘அமைச்சரே, உங்களுக்கு நான் எதுவும் செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டீர்கள். அதற்குப் பதிலாக இங்கே நீங்கள் வழிபடுவதற்கு ஒரு நல்ல கோவில் கட்டித்தருகிற பாக்கியத்தையாவது எனக்குக் கொடுங்கள். தங்கமும் வெள்ளியும் வைடூரியமுமாக இழைத்து கட்டித் தருகிறேன். அங்கே நீங்கள் நிம்மதியாக இறைவனை வழிபடலாம். தியானம் செய்யலாம்’.

அமைச்சர் ஒரு விநாடி தயங்கினார். ‘நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாளைக்குக் காலையில பதில் சொல்லட்டுமா?’



அரசன் ஒப்புக்கொண்டான். அவனும் தன்னுடைய படை பரிவாரங்களோடு அந்தக் காட்டிலேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலை அவர்கள் விழித்து எழுந்தபோது அமைச்சரைக் காணவில்லை. குடிசைகூட இல்லாத இன்னொரு காட்டைத் தேடி அவர் காணாமல் போயிருந்தார்.

இதுதான் துறவறமா?, நம்முள் எழும் கேள்விக்குப்  பதிலளிக்கிறார்
வேதாத்திரி மகரிஷி்:
அன்பர் ஒருவர்;
''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே''
என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான் இருக்கப்
போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக அர்த்தம்? இருக்கின்ற
இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு கேட்பதை 
விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு முறை அறிந்து ஒழுகும் போது
துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது.ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான் உங்களால் சீரணிக்கச் செய்ய முடியும்

என்று நன்றாகத்  தெரிகிறது. அதைத் தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கேயே அதோடு நிறுத்தக் கூடிய அறிவும்,செயலும் வந்து விட்டன என்றால் அதாவது
அறிந்த அறிவுக்குச்  செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம் வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள்,
வெந்து போன பிறகு ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று  கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''.
வேக வைக்கின்றவரை உறவு; இறக்குவது துறவு. இதற்கு மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை
செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு, அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

கொசுறு:


வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்னு நீ பெரிய துறவி

 மாதிரி டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க.நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

Thursday, 29 November 2012

மனம்!(Mind)



கடவுள்  மனிதர்களுடன் தங்கும்  எண்ணத்தில்  பூலோகம்  வந்தார்.
தெருவில் நடந்துகொண்டிருந்த வயதான ஒரு நபரிடம், தன்னைக் கடவுள் என்று அறிமுகம் செய்து கொண்டார்.



அந்த வயதானவர் சொன்னார், கடவுளே என்னை ஏன் இப்படி அசிங்கமாக படைத்தாய்.என்னையும் ஒரு சினிமா   நடிகரைப் போல் படைத்திருக்கலாமே என்றார்.
அவரிடமிருந்து சாமர்த்தியமாக கடவுள் தப்பினார்.

பூங்காவில் இருந்த ஒரு பெண்ணிடம் தன்னைக்  கடவுள் என்றார். அந்தப் பெண், கடவுளிடம்  "எதிர் வீட்டில் இருக்கும் கங்காவைப் போல் தனக்கு தலைமுடி நீளமாக  இல்லை"


என முறையிட்டாள். கடவுள் எடுத்தார் ஓட்டம்.

பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு முன்பு   கடவுள் நின்றார்.

 அவன் கூறினான், உன்  படைப்பு  எல்லாம் ஓகே தான், ஒரு ஐஸ்கிரீம் மலையை  நீ ஏன் உருவாக்கவில்லை என கோபித்துக்கொண்டான்.
அவனிடமிருந்து நழுவினார் கடவுள்.

சந்தித்த ஒவ்வொரு மனிதனும் கடவுளின் படைப்பில் உள்ள குறைகளையே  கூறினார்கள்.இந்த இடத்தில ஆறு ஓடினால் நன்றாக இருக்கும், இந்த மலையை  நகர்த்தினால்நல்லது, இங்கே பள்ளம் இருந்தால் நல்லது, கடல் இருந்தால் நல்லது, இப்படியாக பலப் பல குற்றங்கள்,குறைகள்.
 
மகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும், மகன் படிக்க வேண்டும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும்,
தொழிலில் லாபம் கிடைக்கவேண்டும், வருமானம்  உயர  வேண்டும்
இப்படி பலப் பல வேண்டுதல்கள். அலுத்துப்போனார்  கடவுள்.

ஓடினார்,ஓடினார் மனிதர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என கடவுள் உயரமான மலை மீது அமர்ந்து கொண்டார்.

மனிதர்கள் அவரை விடுவதாக இல்லை. மலை உச்சி வரை அவரை தேடி நடையாய் நடந்தார்கள்.
அங்கிருந்து கடலுக்குள் ஓடி ஒளிந்தார், அங்கும் அவரைத் தேடி கப்பலில் கூட்டம் அலைமோதியது.

ஒளிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு இடமும் அகப்படவில்லை.
யோசித்தார் கடவுள், மனிதன் தேடாத இடம் எது?.....ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் கண்டுபிடித்தார். அதுதான் மனித மனம்.
கடைசியில் கடவுள் மனிதனின் மனதிற்குள் ஐக்கியமானார்.
ஏனென்றால் மனம் ஒன்றைத்தான் மனிதன் தேடுவதில்லை, வெளியில்தான் எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருகிறான்.



மனம் பற்றி மகரிஷி இப்படியாகக் கூறுகிறார் :

"கருமூலம் எண்ணிறந்த பிறப்பால் வந்த
கருத்தாற்றல் அடிப்படையாய் அமையப் பெற்று
உருவெடுத்த பின் உடலால் அறிவால் துய்த்த
உணர்ச்சி, பழக்கம், ஒழுக்கம்,விளக்கம் மற்றும்
வரும் தேவை, இருப்பு, சூழ்நிலை, தொழில் செய்
வாய்ப்பு, உடல்நலம், அறிவின் வளர்ச்சி கூடி
ஒருவருக்கு அறிவியக்கம் அவ்வப்போது
உருவாகும் தொகுப்புச் சொல் மனமாம் காணீர்!"

மனம் பற்றி முறையான விளக்கம் மற்றும் மனதிற்கு தேவையான பயிற்சிகள் மனவளக்கலை மன்றத்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.



கொசுறு

திருவாத்தானிடம் உள்ள ஒரே ஒரு கெட்ட பழக்கம் திருடுவதுதான்.
அவனது அப்பா பணத்தை வீட்டிற்குள் எங்கு வைத்தாலும் சாமர்த்தியமாக சுட்டுவிடுவான்.
பீரோ,அலமாரி, சமையல் அறை, கதவு, ஜன்னல் எங்கு பணம் வைத்தாலும்  விட்டுவைப்பதில்லை.
அவன் அம்மாவிடம் அவனது திருட்டுதனத்தைக் கூறி அலுத்துக்கொள்வார்  அப்பா .
கொஞ்ச நாளாக அவர்,  திருவாத்தானைப் பற்றி புகார் கூறுவதில்லை.
ஆச்சர்யத்துடன்  அவள் கேட்டாள்,
ஏங்க இப்பவெல்லாம் பணத்த எங்க வெக்கிறீங்க?, பணம் பத்திரமா இருக்குது போல!...

அடியே, அவன் தொடாதது அவன் பாட புத்தகம் ஒன்றுதான், அதுக்குள்ளதான் பணத்தை ஒளித்து வைக்கிறேன்.

மெளனம்(Power of Silence)

ஒரு பெரிய அறிஞர். அவருக்கு அட்டாங்க யோகத்தில் பல சந்தேகங்களை 
தீர்த்துக்கொள்வதில்  ஆசை. ஒரு குருவைத் தேடி வந்தார்.
வணக்கம் போட்டார். விஷயத்தைச் சொன்னார்.
அவர் பேசுகிறவிதத்தை ஊன்றிக் கவனித்த குருநாதர் சொன்னார். ’இதோ பாரப்பா, உன் மனசு ஒரு நிலையில் இல்லை. நீ ரொம்பக் குழம்பியிருக்கிறாய்.
இப்போது நான் உனக்கு அட்டாங்க யோகம்  சொல்லிக்கொடுத்தால் பிரயோஜனம் இருக்காது. அநாவசியமாக நம் இருவரின் நேரமும் வீணாகும்.
'இதைக் கேட்ட அறிஞரின் முகம் சுருங்கிவிட்டது. ’குருவே, நீங்களே இப்படிச் சொன்னால் நான் எங்கே போவேன்?’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.
‘எப்படியாவது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். என் மனசில இருக்கற சந்தேகங்களைத் தீர்த்துவைக்கணும்.’
‘சரி. உன்னை நான் சிஷ்யனா ஏத்துக்கறேன். ஆனா ஒரு நிபந்தனை.’
‘சொல்லுங்க குருவே!’
‘இங்கே நீ ஆறு மாசம் மௌன விரதம் இருக்கணும்.’
’மௌன விரதமா?’ வந்தவர் அதிர்ந்தார். ’அப்புறம் எப்படி நான் என்னோட சந்தேகங்களைக் கேக்கறது?’
’அதையெல்லாம் மனசுல குறிச்சுவெச்சுக்கோ. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். ஆனா இப்போ இல்லை. 6 மாசம் கழிச்சுதான்.’
அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார். ஆசிரமத்தில் சேர்ந்தார். மௌன விரதத்தைத் தொடங்கினார்.
அடுத்த பல மாதங்கள் அவருடைய நேரம்முழுவதும் தியானம், பிரார்த்தனை, வாசிப்பு, குருவின் சொற்பொழிவுகளைக் கேட்பது என ஓடியது. மெல்ல அவரது மனம் தெளிந்தது. முன்பு குழப்பியடித்த விஷயங்கள் இப்போது நிதானமாக யோசித்தபோது புரிந்தன.
ஆறு மாதங்கள் முடிந்தன. குரு அவரை அழைத்தார்.

’நீ மௌன விரதம் இருந்தது போதும். இப்போது உன் கேள்விகளைக் கேட்கலாம்.’
அறிஞர் அமைதியான குரலில் சொன்னார். ’கேட்பதற்கு ஒன்றும் இல்லை குருவே'!.


மெளனம் பற்றி வேதாத்திரி மகரிஷி, "மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.
இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்" என்கிறார்.



கொசுறு:

மூன்று துறவிகள் மவுனம் இருந்தனர்.

பதினைந்து  நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார்.

இரண்டாம் துறவி “நீ பேசி விட்டாய்” என்றார்.

மூன்றாம் துறவி “நான் மட்டும் தான் பேசவில்லை” என்றார்.

Monday, 26 November 2012

நான் ஏன் திருந்த வேண்டும்?(Self Realisation)




இள வயதிலேயே என்னை ஞானி என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் எங்கு சென்றாலும் என்னைக் காண மக்கள் கூட்டம் திரண்டது."ஞானி" அடையாளம் உலகம் முழுவதும் என்னை கொண்டு சேர்த்தது.

எனக்கு அப்போது இருபது வயது இருக்கும், உலகில் எல்லாமே தலைகீழாக நடப்பதாக எனக்குத் தோன்றியது. விட்டுக்கு வீடு சண்டை,நாட்டுக்கு நாடு சண்டை, இனத்துக்கு இனம் மோதல், மதங்களுக்குள் வேற்றுமை, மக்களுக்குள் ஒற்றுமையில்லை.


உலகம் அமைதி பெற எனக்கு வழிமுறை  தோன்றியது.எனக்கு தோன்றிய வழிமுறையில்,
சித்தாந்தத்தில்,கொள்கையில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை பிறந்தது. அதை அனைவரும் பின்பற்றினால் உலகம் அமைதிபெறும்.ஆகவே நான் நினைப்பதுபோல் இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என எண்ணினேன்.


எனது சித்தாந்தத்தைப்  பரப்புவதற்காக  இருபதாண்டு காலம் பல்வேறு நாடுகளுக்கு   பயணம் மேற்கொண்டேன், 
நாட்டு தலைவர்கள் பலரைச் சந்தித்தேன், அமைதிக்கான வழிமுறைகள் பற்றி  விவாதித்தேன்.
நான் கூறும் திட்டங்களை கையாண்டால் ஒற்றுமையுடன் வாழமுடியும் 
என்பதை விளக்கினேன்.இருபது ஆண்டுகள் கடந்தது, நிலைமையில் அணுஅளவும் மாற்றம் ஏற்படவில்லை.

உலகம் முழுதும்  மாற்றமுடியும்  என்பது அவ்வளவு எளிது அல்ல, நாட்டை மாற்றினால் என்ன?,இந்த முயற்சியில் சுமார் பதினைந்து ஆண்டுகளைச் செலவிட்டேன்,தலைவர்கள் பலரைச் சந்தித்தேன், 
அமைதிக்கான வழிமுறைகள் பற்றி  விவாதித்தேன்.பதினைந்து ஆண்டுகள் சென்றும் நாட்டில் ஒரு மாற்றமும் இல்லை.


நாடு என்பதுகூட அதிகம், நாம் இருக்கும் ஊரையாவது மாற்றலாம் என்று கஷ்டப்பட்டு பத்து ஆண்டுகள் உழைத்தேன்.
ஊர் கூட்டம் கூட்டினேன், தெருவில் நின்று பிரச்சாரம் செய்தேன், பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினேன்.
பத்து ஆண்டுகளும் சென்றது, ஒரு மாற்றமும் இல்லை.



ஊரைத்தான் மாற்றமுடியவில்லை சரி,  என் வீட்டில் உள்ளவர்களையாவது  திருத்தலாம் என்று சில வருடங்கள் முயன்றேன், என் உடன்பிறந்தோரை, எனது உறவினர்களை  ஒற்றுமையாய் அமைதியாய்  இருக்க வலியுறுத்தினேன்,  ஒன்றுமே நான் நினைத்தது போல் நடக்கவில்லை.



இப்போது நான் மரணப்படுக்கையில் எனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். இப்போதுதான், முதன் முதலாக நான் என்னை மாற்றவேண்டும் என்ற உணர்வு வந்தது. அப்படி என்னை மாற்றியிருந்தால் நானும் அமைதியடந்திருப்பேன், என் குடும்பத்திலும்   அமைதியை கொண்டுவந்திருக்க  முடியும் என்பது புரிந்தது.அடுத்தவர்களை மாற்ற முயன்றேனே தவிர என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஒரு நாளும் எண்ணியதில்லை. நீங்களும் என்னை மாதிரிதானே? 


மனைவியைத்  திருத்தவேண்டும்!, கணவனுக்கு மனைவி  திருந்தினால் போதும்!, மகன் நம் சொல்லைக்  கேட்க வேண்டும்!, மகனுக்கோ,  அப்பா தான் சொல்வதைப்  புரிந்து நடந்து கொள்ள வேண்டும் - வயதானாலே இப்படிதான்!, மனவளக்கலைக்கு அவள் மட்டும்  சென்று திருந்தினால் போதும் என கணவன்(மனைவி நினைப்பாள்-கணவன் மட்டும் போனால் போதும்),
எனது மேனேஜர் திருந்தவே மாட்டார்!,
எனது ஆசிரியர் எப்பவுமே இப்படிதான்!,
பக்கத்துக்கு வீட்டு பையன் திருந்தாத வால்!,
இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான் அவர்களால்தான் நாட்டில் இவ்வளவு குழப்படியும்!,
அரசாங்க உத்தியோகஸ்தர்கள் திருந்துவது எப்போதோ?,
போலீஸ் என்றாலே அடாவடிதான்!,
ஜாதித் தலைவர்கள் திருந்தப்போவதில்லை!, 
மத குருமார்கள் திருந்த இனிஒரு ஜன்மம் வேண்டும்!
பத்திரிக்கைகாரர்கள் எப்பவுமே இப்படித்தான் திரித்து எழுதுகிறார்கள்!,
டிவிக்காரர்கள் திருந்த மாட்டார்களா?,
எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே ஒழிந்தார்கள்!  
இப்படி ஒரு பெரிய பட்டியல்.
இந்த உலகமே திருந்தவேண்டும்,
நான் மட்டும் இப்படியேதான் இருப்பேன்?,அப்படித்தானே?!

வேதாத்திரி மகரிஷி ஞானக் களஞ்சியம் நூலில் "தன் குற்றம் உணர பிறர் குற்றங்களை மன்னிப்போம்" என பின் வரும் பாடலில் குறிப்பிடுகிறார்:

தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்!
தன குற்றம் குறை கடமைத்  தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
என் குற்றம் பிறர் மீது சுமத்தக் கூடும்?
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும் 
மென்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாவம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்(575)


திருந்தி வாழ்வதை பின்வரும் பாடலில் கூறுகிறார்:

திருந்தி வாழ
பழக்கமே பற்றாக பாசமாக
பரிணமித்துச் சிக்கல் வாழ்விலாச்சு
இழக்கின்றோம் இயற்கைவள இன்பமெலாம்
இதையுணர்ந்து ஏற்றபடி திருந்தி வாழ்வோம்(599) 

கொசுறு:
நம்ம பரமேஷுக்கு லாட்டரி விழுந்து கொடீஸ்வரன் ஆகியும் இன்னும்  திருந்தவேயில்ல...!
எதவச்சு சொல்லுற?.
என்னிடம் ஒரு வருடம் முன் கடன் வாங்கின 50 ரூபாவ தராம  இன்னும் இழுத்தடிக்கிறான்.


இன்னொரு கொசுறு:
வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்களேன் …!

சாமியாரா வாழர ஒருத்தர் மனம்
திருந்தி நேர்மையா வாழ ஆரம்பிக்கிறார்…!

 

மேலுள்ள கதை/கட்டுரையை  ஒலி  வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே  கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம்  கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.

 http://www.youtube.com/watch?v=RQqjzfJeESI

Sunday, 25 November 2012

ஆசை சீரமைப்பு!(Moralisation of Desire)


வழியில் சந்தித்த துறவியும்  வியாபாரியும் பேசிக்கொண்டே அந்த ஊரை அடைந்தனர்.இருவரும்  பசிக் களைப்புடன் அந்த ஊரில் அன்னதானம் கிடைக்கும் சத்திரத்தை வந்தடைந்தனர்.அன்று பணக்காரர் ஒருவர் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தார்.பழம் முதல் இனிப்பு, வடையென தடபுடல் விருந்து.இவர்கள் சென்ற நேரம் ஒருவருக்குத்தான் சாப்பாடு மீதம் இருந்தது.வியாபாரிக்கு சாப்பாட்டின் மேல் ஆசை வந்தது.வியாபாரி  துறவியைப் பார்த்து, "இன்று அமாவாசையாயிற்றே, தாங்கள் பட்டினியாயிருக்க வேண்டாமா?" என்று கேட்டான்.

துறவி மவுனமாக இருந்தார்.

வியாபாரி மட்டும் சாப்பாடை வாங்கிக் கொண்டான். பழம் முதல் இனிப்பு வரை ஒன்றுவிடாது ருசித்து சாப்பிட்டு முடித்தான்.

பிறகு இருவரும் சேர்ந்து பயணத்தை தொடர்ந்தனர். வழியில் ஒரு ஆறு
கு
றுக்கிட்டது.வியாபாரிக்கு விபரீத ஆசை உதித்தது.மடியில் உள்ள பணம் தண்ணீரில் மூழ்காமல் இருக்க வேண்டுமே?.
தண்ணீர் என்றால் தனக்கு பயம் எ
  தன்னைத் தூக்கிச் செல்லும்படி வியாபாரி துறவியிடம்  வேண்டினான்.
அவரும் அப்படியே தூக்கிச் சென்றார்.


பாதி ஆற்றைக் கடந்ததும்,
துறவி  வியாபாரியைப் பார்த்து, "உன் மடியில் பணம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
வியாபாரியும், "இருக்கிறது" என்றான்.

"அப்படியா? துறவியாகிய  நான் பணத்தைச் சுமக்கக் கூடாதே!" என்று வியாபாரியைத் "தொப்" பென்று தண்ணீரில் போட்டார்.
வியாபாரி உயிர் தப்பிப்  பிழைத்தது பெரிய கதை.



ஆசையில்லாமல் உலகில் வாழ முடியாது, ஆசையை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.பிறவிப் பெருங்கடல் நீந்துதல் என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டும் என்பதே ஓர் ஆசைதானே!
ஆசையை அடக்கினால் அடங்காது.உணர்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும். தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று  ஆராயும் போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதி பெறும்.பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தாமாகவே மாய்ந்துவிடும்  என்கிறார்.


கொசுறு:
அந்த நோயாளிகளுக்கு இறப்பதற்கு அரைமணி நேரம்தான் அவகாசம்.
டாக்டர், "உங்கள் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார். 


"வேற நல்ல டாக்டரைப் பார்க்கணும் " 

சினம் தவிர்த்தல்!(How to deal Anger?)


மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.
எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை.

எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ என்றபடி மீண்டும் கத்தினான்.
தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.
‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க?’’
தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்.

‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான். நானும் சொன்னேன். ஆனால், அவன் விடவில்லை.
அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’
இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.
‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை.
மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

"சினம்" தவிர்க்கபடவேண்டியது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.மனவளக்கலை(பாகம் 1)  நூலில் அவர் எழுதுகிறார்:
தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்துத் தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சிவயப் பட்ட பகை உணர்வு சினம் ஆகும்.நெருங்கிய நண்பர்களிடத்திலே சுற்றத் தார்களிடதிலே  நம்மோடு அன்பு கொண்டு நமது நலனுக்காக வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் தான் அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம்.
சினம் எழுகின்ற போது நமது ஜீவகாந்தச் சக்தியானது அதிகமாக வெளியேறுகிறது - அதனால் உடலும் மனமும் பாதிக்கப்படும்.
"எனக்குக் கோபம் வருகிறது", என்று சொல்லுகிறோம். நாம் வேறு,கோபம் வேறா? நாமே கோபமாக மாறுகிறோம்; தன் நிலையில் மாறுதல் அடைகிறோம் எனபது தான் பொருள். நான், அசல் நானாகவே இருக்கும்போது அங்கே கோபமில்லை.நான் கோபமாக இருக்கும்போது அங்கே நானில்லை. மரத்தால் செய்யப்பட்ட பொம்மையை வைத்துக் கொண்டு மரத்தை நோக்கினால் மரம் இல்லை.பொம்மையின் வடிவத்தை நோக்கினால் மரம் இல்லை.மரம், பொம்மை இரண்டையும் நோக்கினால் மரப்பொம்மை என்றாகிறது.இது போலவே, கோபமாக இருக்கும் போது அறிவென்பது ஆராய்ச்சி நிலையில், விழிப்பு நிலையில் இல்லை, அறிவால் ஆராயப் புகுந்தால் கோபம் என்பதில்லை. கூர்ந்து நோக்கினால்; ' நான் என்கிற தத்துவமே ' தான் கோபமாக இருகின்றது என்பது புலனாகிறது. 
  

சினத்தை தவிர்ப்பது எப்படி என்பதை பயிற்சி முறையாகவே மகரிஷி அகத்தாய்வு மூலம் நமக்கு அருளியிருக்கிறார். 

கொசுறு:
ஏங்க உங்க பொண்டாட்டி எப்போதுமே கோபமா இருக்காங்க

ஒரு நாளைக்கு கோபத்துல கூட நீ அழகா இருக்கேன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அன்னிலிருந்து இப்படி தான் இருக்கா

Thursday, 22 November 2012

வாழ்த்தும் பயனும்!(Power of Blessings)





சற்குரு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட குருவானவர் சதுரகிரி மலை அடிவாரத்தில்  ஆசிரமம் அமைத்து தன் சீடர்களுடன் தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார்.
தினமும் மாலை வேளைகளில் குருவைக் காண பல ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.அவரும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளுரை, வாழ்த்து, நல்வாக்கு  வழங்கி ஞான மார்க்கத்தைப்  புகட்டி வந்தார். சில சமயம் சீடர்களுக்கும் குருவின் வாழ்த்தும், வாக்கும், போதனையும்  வியப்பை அளிக்கும்.எப்படியோ, குருவின் நல்வாக்கும் வாழ்த்தும் முறையும் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தன.
ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் தன் குடும்ப சகிதம் குருவைக் காண வந்திருந்தார்.
தன்னை நாடி வரும் அன்பர்களை குரு சந்திக்கும் மாலை வேளை வந்தது.குருவும் பர்ணசாலையில்  வந்து அமர்ந்தார். ஒவ்வொருவராக குருவை சந்தித்து அருளாசியுடன் விடை பெற்று சென்றுகொண்டிருந்தார்கள்.அப்போது குருவைக் காணவந்த தற்பெருமை பேசும் ஒரு அன்பர் தனக்கு உபதேசம்  வழங்க வேண்டிக்கொண்டார்.
சற்குரு  உபதேசத்தை ஆரம்பித்தார் :

"தகப்பன் சரியில்லை சொத்து போச்சு..
தாய் சரியில்லை பாசம் போச்சு..
சகோதரர்கள் சரியில்லை நேசம் போச்சு..
நண்பன் சரியில்லை உண்மை போச்சு..
பிள்ளகைகள் சரியில்லை மரியாதை  போச்சு..
மனைவி சரியில்லை எல்லாமே போச்சு.."

"பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் !."

"உறங்கிப் பார் கஷ்டம் வரும்;
 உழைத்துப் பார் அதிர்ஷ்டம் வரும்! "

"நம் சாதனைகளுக்கு நாமே செய்யும் சவப்பெட்டி! -தற்பெருமை" என்றார்.

உங்கள் உபதேசத்திற்கு நன்றி  குருவே என விடைபெற்றுக்கொண்டார் அந்த நபர்.

எல்லோரும் சென்றபின் செல்வந்தரின் முறை வந்தது. செல்வந்தரிடம்   தன்னைக்  காண வந்த நோக்கம் என்ன என்று வினவினார் குரு.செல்வந்தர் கூறினார், குருவே எனது குடும்பம் சகிதம் தங்களைக்  காண வந்துள்ளேன், எங்கள் அனைவரையும் வாழ்த்தி, ஆசிர்வதித்து, நல்வாக்கு வழங்குங்கள் என்றார். வழக்கமான
புன்சிரிப்புடன் குரு “அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்”  இதுவே நாம்  அளிக்கும்  வாழ்த்தும், நல்வாக்கும்  என்றார்.
“என்ன குருவே!... இதுவா வாழ்த்து? ... இதுவா  நல்வாக்கு?” அச்சத்துடன் செல்வந்தர் கேட்டார்.
குரு சொன்னார்,
“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி!  வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளையோ இறந்தால் எத்தனை துக்கம்?”

குழம்பிபோன செல்வந்தர், ஏதேனும் ஒரு நல்வாக்கு கிட்டுமா குருவே  என்றார்?
பகைமை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது !
வாழ்த்தும் போது பகைமை நிற்காது ! என்று சொல்லி முடித்தார் சற்குரு.
செல்வந்தருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.


ஆமாம், நாம் ஏன் மற்றவர்களை வாழ்த்த வேண்டும்? பெரியவர்கள் ஏன் நம்மை ஆசிர்வாதிக்க வேண்டும்?
உண்மையில் மனதார மற்றவர்களை வாழ்த்துகிறோமா என நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
"Good Morning,Good Evening,Happy Birthday,Happy Anniversary,Happy Married Life"  இவை எல்லாமே உதட்டளவில்தான் உள்ளது. எத்துனை பேர் உண்மையில் "Good Morning " சொல்லும்போது இன்றைய காலைப் பொழுது இவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்?.கடமைக்காக சொல்வதைப்  போல்  பழகிக்கொண்டோம். அப்படியில்லாமல் மனம் உணர்ந்து உள்ளன்போடு வாழ்த்தப்  பழக வேண்டும்.கடமையே என்றில்லாமல் அடிமனதிலிருந்து வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

வேதாத்திரி மகரிஷி வாழ்த்தும் பயனும் பற்றி குறிப்பிடும்போது,
"ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.
வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே.
எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்" என்று கூறுகிறார்.


கொசுறு:
"ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. வாழ்த்தி ஆசீர்வாதம் பண்ணு பாட்டி."


"பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்காதே."

Tuesday, 20 November 2012

யார் நமது குரு?(Our Guru?)

வெகு நாட்களுக்குப் பிறகு மூன்று  மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின் தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
‘எங்க குருநாதர் இளமையிலேயே துறவறம் மேற்கொண்டவர்,

பெரிய மேதை, விஷய ஞானம் மிக்கவர், ஆன்மீக நூல்களைக்  கரைத்துக் குடித்தவர் தெரியுமா?’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு? ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’
’அப்படியா?’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண்டாவது மாணவர்.
’ஆமா. அவர் தினமும்  தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க!’
‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை!’
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா அழுக்கு தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது, தனக்கு தெரிந்ததை சொல்வார். அவ்வளவுதான்!’
இப்போது மூன்றாவது மாணவர் தனது குருநாதர் பற்றி பேசினார்.
குரு, சீடன் பாரம்பரியம் எங்களுடையது என்று தன்முனைப்புடன் பேசிவரும் கால கட்டத்தில், நீ  இன்னொரு "புத்தன்", என்னைவிட  சிறந்த சிந்தனையாளனாக, ஞானியாக, மகானாக உன்னால் உயர முடியும் என பாமரனுக்கும்  உணர்த்தியவர் அவர். உலகநலத் தொண்டனாக தன்னை அறிமுகம் செய்துகொண்டு வாழ்நாள் முழுதும் உலக அமைதிக்காகவே  வாழ்ந்தவர்.எத்தனையோ உலக நலத் தொண்டர்களை உலகம் முழுதும் உருவாக்கிக் கொண்டிருப்பவர். எல்லோரும் கண் காதுகளை மூடி ஆடு மாடுகள் போல் ஆன்மீக வியாபரச்சந்தையில் சிக்கிக்கொள்ளும் இந்த நாளில்,ஏன்? எதற்கு? எவ்வாறு? என கேள்விகேட்கவைத்து  சுய  சிந்தனையைத் தூண்டியவர்.ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்து இறையுணர்வு பெற முறை வகுத்தவர்.பொருள் ஈட்டும் முறையை மட்டுமே  போதிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மத்தியில் விடுபட்டுப்போன "வாழ்க்கைக் கல்வியை" போதனை முறையாக அல்லாமல் சாதனை முறையாக பாமரனுக்கும் கொண்டு சேர்த்தவர்.சாதி,மதம், இனம், மொழி, நாடு, நான், என்னுடையது என்னும் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வட்டங்களிருந்து வெளிக்கொணர்ந்து, எல்லாமே  இறைநிலையின் தன்மாற்ற நிகழ்வே என உணர்த்தியவர்.சமுதாயத்தில், சுரண்டலையே முதன்மையாகக்  கொண்டு வாழும் இன்றைய சூழ்நிலையில், மனிதன் வாழவேண்டியது  அறம் சார்ந்த வாழ்வே என  வாழ்ந்து காட்டியவர்.மனம் முதல் எண்ணம் வரை, பிரபஞ்ச தோற்றம் முதல் அணுத்துகள் வரை, ஜீவகாந்தம் முதல்  விண்காந்தம் வரை விஞ்ஞான விளக்கம் அளித்து, அதையே பாமரனும் உணரும் மார்க்கம் அளித்தவர்."நான் யார்" என்பதைக் காட்டி, தனி மனித அமைதியே உலக அமைதியென உணர்த்தியவர்.உலகம் முழுவதும் பெண்மையினை ஏதாவது ஒரு வகையில் அடிமையாய் நடாத்தும் ஆண் வர்க்கத்தின் நடுவில் அதை  மாற்றி, பெண்மையினை போற்றக்  கற்றுத்தந்தவர்.துறவு இல்லாமல்  இல்லறத்தில் இருந்து கொண்டு மக்களை விழிப்பு நிலைக்கு அழைத்துச் சென்றவர்."குரு"  சொல்லுக்கு  புது இலக்கணம் வகுத்தவர் அவர் என்றார்.




கொசுறு

குருவே! தாங்கள் நூறு வயது வரை வாழக் காரணம்?
1912 லே  பிறந்ததுதான் 



மேலுள்ள கதை/கட்டுரையை  ஒலி  வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே  கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம்  கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.

http://www.youtube.com/watch?v=DBVULQNj7do

எண்ணம் ஆராய்தல்!(Analysing thoughts)


நல்ல உச்சி வெயில், நடை பாதையின் அருகிலிருந்த கல்லின் மீது ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் .

அவ்வழியே சென்ற கூலியாள் ஒருவர்  உறங்கிக்கொண்டிருந்த நபரைப் பார்த்தார்.
வேலை செய்த அலுப்பு போலும் என்று நினைத்தார்.

வழியில் சென்ற பிச்சைக்காரர்  - தன்னைப்போல் ஒரு பிச்சைக்காரர்  பசியினால் மயங்கி கிடப்பதாக நினைத்தார்

அதே வழியில் திருடன் ஒருவன் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
உறங்கிகொண்டிருந்த நபரைப் பார்த்து , முதல் நாள் இரவில் எங்கேயோ திருடிவிட்டு  பகலில் தூங்கிக்  கொண்டிருப்பதாக நினைத்தான்.

அவ்வழியே சென்ற அரசியல்வாதி உறங்கிகொண்டிருந்த நபரைப் பார்த்து, கட்சித் தொண்டன் ஒருவன்  தண்ணியடித்துவிட்டு  படுத்துக்கிடப்பதாக  எண்ணினார்.

அவ்வழியில் சென்ற ஒரு சாது  - இவர்  முற்றும் உணர்ந்த ஞானியாகத்தான்  இருக்க வேண்டும். கொளுத்தும் வெயிலிலும் இரவு, பகல்  இல்லாமல்  தூங்கிக்  கொண்டிருக்கிறாரே  என வணங்கிவிட்டுச் சென்றார். 


வேதத்திரி மகரிஷி கூறுகிறார்:
"எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை – நாமே விரும்பி, முயன்று – மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்."
"எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்."
"தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்."


கொசுறு :


ஆசிரியர் கூறினார், மாணவர்களே நானும் உங்களில் ஒருவன். என்னை வேறுபடுத்தி எண்ண வேண்டாம்…!
சரிடா மச்சி! கீழே உட்காரு…!

Monday, 19 November 2012

இறைநிலை!

ஒரு துறவி தன் பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார்.அப்போது நண்பகல்.கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது அந்த ஊரில் கடுமையான வறட்சி.துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம்.அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை.அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது.அவர் இளைஞனிடம், ''தம்பி,நீ கொடுத்து வைத்தவன்.ஊரே வறட்சியின்  பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது.உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது.கடவுளின்  பூரண அருள் உனக்கு இருக்கிறது என்றார்.


'அதற்கு இளைஞன் துடிப்புடன்,'' ஐயா,வந்த வழியில் பார்த்திருப்பீர்கள்.இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது.இந்த இடமும் அப்படித்தான் இருந்தது.இரவு பகலாய் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தை சீர்திருத்தினேன்.அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.அப்படி நான் உழைத்ததன் பலனை,சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!''என்று சொன்னான்.
துறவி அதற்கு,''தம்பி,உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான்.இருந்தாலும் கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?''என்று கேட்டார்.
அதற்கு இளைஞன் சொன்னான்,''ஐயா,நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது.கடவுளும் இருந்தார்.நான் இங்கு வராமல் கடவுள்  மட்டும் இருந்தபோது இந்த நிலத்தைப் பார்க்க சகிக்கவில்லையே!'' என்றான்.



துறவிஇளைஞனைப் பார்த்து, "தம்பி, உன் அறிவின்  மேன்மை கண்டு  மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.இதுவரை நமக்குக்  கற்பிக்கப்பட்ட வழிமுறையில் மட்டுமே கடவுளை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.கடவுள் என்கிற  இறையாற்றலை, வற்றாயிருப்பை, இறைநிலையை இதுநாள்வரை வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு பொருள் கொண்டு  அணுகியிருக்கிறது மனித இனம்.
இறைநிலையின் தன்மாற்ற நிகழ்வில் இந்த பிரபஞ்சமும் உயிரினங்களும் தோன்றின.ஏன், நீயும் நானுமே இறையாற்றலின் தன்மாற்ற நிகழ்வே. நீ, தாயின் கருவறையில் உதித்தது, இங்கே கிணறு வெட்டி பயிர் உண்டாக்கியது எல்லாமே கருமைய பதிவுகளின்(Genetic Imprints)   தன்மைகளால்  நடந்த தொடர் நிகழ்வே.
இறைவனின் கருணையும், அன்பும், ஆற்றலும் அணுவிலிருந்து  பிரபஞ்சம் முழுமையுமே  உள்ளது.அதுவே  நமக்குள்ளும் இருக்கிறது நம்மை இயக்கிகொண்டும் இருக்கிறது.கடவுள் அணுத்துகள் முதல் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி, நமக்குள்ளும் மனமாய் பரிணமித்து இருப்பதை உணர்ந்தால் இறைநிலைக்கும் நமக்கும் உள்ள  தொடர்பை எளிதில்  உணரமுடியும்.மனதில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமின்றி நமது  விரலின் அசைவுகூட பிரபஞ்சத்தின் கோடியில் உள்ள நட்சத்திரத்தை அலை வடிவில் சென்றடைகிறது.ஆகவே பிரபஞ்சம் முழுமையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, இதற்கு மனிதனும் கடவுளும் விதிவிலக்கல்ல " என்று மறுமொழி கூறினார்.
"புரிந்தது"போல் தலையை ஆட்டினான் அந்த இளைஞன்.


வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்," இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக,மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்து சொல்ல முடியவில்லை.ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்?.மனம் சுழல் விரைவு அதிகமாகிறபோது அது அலை.அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை.மன அலைச்சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனதிற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.
இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில்தான் இருக்கின்றன.அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்".                   



கொசுறு:


சிலைகளுக்கும் பக்தனுக்கும்
இடையில்தான் பூசாரி நிற்கிறான்
ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
நிச்சயமாக அவன் இல்லை
எங்கெங்கோ எதை எதையோ
தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
இதை அறிந்து கொண்டால்
பகுத்தறிவும் பெருகிப் போகும்
பூசாரிக்கும் தான் மனிதன் என்று
புரிந்தும் போகும்

சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்

இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
சத்தியமாக இல்லவே இல்லை
அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
"ஆனந்தர்களின்" வேஷங்களும்
முழுதாய் கலையும்

நம் நோக்கில் நாடுகளாய்

பூமியைப் பிரித்திருத்தலைப்போல்
அந்த ஆதி மூலம் தன்னை
பத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை
கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்

"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
பக்குவம் நமக்கும் வந்துவிடும்
வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்