Friday, 30 November 2012

துறவு!(Reunication)


அமைச்சர் ஒருவர் துறவு மேற்கொண்டு  தனிமையில் வாழ விரும்பினார். அடர்ந்த மலைக் காட்டிட்குள் சென்று ஒரு சிறிய  குடிசை அமைத்துக் கொண்டு  வசிக்கத் தொடங்கினார்.
அங்கேயும் அவரைத் தேடிக்கொண்டு  அந்த நாட்டு அரசன் வந்தான்.அமைச்சர் மீது அரசனுக்கு மரியாதையும் பிரியமும்  அதிகம்.

‘அமைச்சரே, நீங்கள் இப்படித் தன்னந்தனியே காட்டுக்குள் வந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என்றான் அந்த அரசன்.
'நான் உங்களுக்கென்று ஒரு உல்லாச  மாளிகை கட்டித் தருகிறேன். உங்களைச் சகல வசதிகளோடும் வாழவைக்கிறேன். நீங்கள் மீண்டும் ஊருக்குள்ளேயே வந்துவிடவேண்டும்'.

‘அரசே, உன்னுடைய அன்புக்கு நன்றி. எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் துறவியாக வாழ விரும்புகிறேன் அதற்கு இந்த இடம்தான் சரி!,தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மறுத்துவிட்டார்  அமைச்சர்'.

அரை மனத்தோடு அரசன் சம்மதித்தான். அமைச்சரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.


 
பத்தடி நடந்தவுடன் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘அமைச்சரே, இங்கே நீங்கள் வழிபடுவதற்குக் கோவில் ஏதாவது இருக்கிறதா?’

’கோவிலா? அது எதற்கு?’

‘வேறு எதற்கு? சாமி கும்பிடுவதற்குத்தான்!’

‘அதெல்லாம் அவசியமில்லை’ என்றார் அமைச்சர்.

அரசன் முகத்தில் திடீர் வெளிச்சம். ‘அமைச்சரே, உங்களுக்கு நான் எதுவும் செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டீர்கள். அதற்குப் பதிலாக இங்கே நீங்கள் வழிபடுவதற்கு ஒரு நல்ல கோவில் கட்டித்தருகிற பாக்கியத்தையாவது எனக்குக் கொடுங்கள். தங்கமும் வெள்ளியும் வைடூரியமுமாக இழைத்து கட்டித் தருகிறேன். அங்கே நீங்கள் நிம்மதியாக இறைவனை வழிபடலாம். தியானம் செய்யலாம்’.

அமைச்சர் ஒரு விநாடி தயங்கினார். ‘நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாளைக்குக் காலையில பதில் சொல்லட்டுமா?’



அரசன் ஒப்புக்கொண்டான். அவனும் தன்னுடைய படை பரிவாரங்களோடு அந்தக் காட்டிலேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலை அவர்கள் விழித்து எழுந்தபோது அமைச்சரைக் காணவில்லை. குடிசைகூட இல்லாத இன்னொரு காட்டைத் தேடி அவர் காணாமல் போயிருந்தார்.

இதுதான் துறவறமா?, நம்முள் எழும் கேள்விக்குப்  பதிலளிக்கிறார்
வேதாத்திரி மகரிஷி்:
அன்பர் ஒருவர்;
''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே''
என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான் இருக்கப்
போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக அர்த்தம்? இருக்கின்ற
இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு கேட்பதை 
விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு முறை அறிந்து ஒழுகும் போது
துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது.ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான் உங்களால் சீரணிக்கச் செய்ய முடியும்

என்று நன்றாகத்  தெரிகிறது. அதைத் தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கேயே அதோடு நிறுத்தக் கூடிய அறிவும்,செயலும் வந்து விட்டன என்றால் அதாவது
அறிந்த அறிவுக்குச்  செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம் வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள்,
வெந்து போன பிறகு ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று  கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''.
வேக வைக்கின்றவரை உறவு; இறக்குவது துறவு. இதற்கு மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை
செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு, அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

கொசுறு:


வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்னு நீ பெரிய துறவி

 மாதிரி டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க.நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

No comments:

Post a Comment