Monday, 19 November 2012

இறைநிலை!

ஒரு துறவி தன் பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார்.அப்போது நண்பகல்.கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது அந்த ஊரில் கடுமையான வறட்சி.துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம்.அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை.அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது.அவர் இளைஞனிடம், ''தம்பி,நீ கொடுத்து வைத்தவன்.ஊரே வறட்சியின்  பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது.உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது.கடவுளின்  பூரண அருள் உனக்கு இருக்கிறது என்றார்.


'அதற்கு இளைஞன் துடிப்புடன்,'' ஐயா,வந்த வழியில் பார்த்திருப்பீர்கள்.இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது.இந்த இடமும் அப்படித்தான் இருந்தது.இரவு பகலாய் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தை சீர்திருத்தினேன்.அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.அப்படி நான் உழைத்ததன் பலனை,சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!''என்று சொன்னான்.
துறவி அதற்கு,''தம்பி,உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான்.இருந்தாலும் கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?''என்று கேட்டார்.
அதற்கு இளைஞன் சொன்னான்,''ஐயா,நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது.கடவுளும் இருந்தார்.நான் இங்கு வராமல் கடவுள்  மட்டும் இருந்தபோது இந்த நிலத்தைப் பார்க்க சகிக்கவில்லையே!'' என்றான்.



துறவிஇளைஞனைப் பார்த்து, "தம்பி, உன் அறிவின்  மேன்மை கண்டு  மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.இதுவரை நமக்குக்  கற்பிக்கப்பட்ட வழிமுறையில் மட்டுமே கடவுளை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.கடவுள் என்கிற  இறையாற்றலை, வற்றாயிருப்பை, இறைநிலையை இதுநாள்வரை வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு பொருள் கொண்டு  அணுகியிருக்கிறது மனித இனம்.
இறைநிலையின் தன்மாற்ற நிகழ்வில் இந்த பிரபஞ்சமும் உயிரினங்களும் தோன்றின.ஏன், நீயும் நானுமே இறையாற்றலின் தன்மாற்ற நிகழ்வே. நீ, தாயின் கருவறையில் உதித்தது, இங்கே கிணறு வெட்டி பயிர் உண்டாக்கியது எல்லாமே கருமைய பதிவுகளின்(Genetic Imprints)   தன்மைகளால்  நடந்த தொடர் நிகழ்வே.
இறைவனின் கருணையும், அன்பும், ஆற்றலும் அணுவிலிருந்து  பிரபஞ்சம் முழுமையுமே  உள்ளது.அதுவே  நமக்குள்ளும் இருக்கிறது நம்மை இயக்கிகொண்டும் இருக்கிறது.கடவுள் அணுத்துகள் முதல் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி, நமக்குள்ளும் மனமாய் பரிணமித்து இருப்பதை உணர்ந்தால் இறைநிலைக்கும் நமக்கும் உள்ள  தொடர்பை எளிதில்  உணரமுடியும்.மனதில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமின்றி நமது  விரலின் அசைவுகூட பிரபஞ்சத்தின் கோடியில் உள்ள நட்சத்திரத்தை அலை வடிவில் சென்றடைகிறது.ஆகவே பிரபஞ்சம் முழுமையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, இதற்கு மனிதனும் கடவுளும் விதிவிலக்கல்ல " என்று மறுமொழி கூறினார்.
"புரிந்தது"போல் தலையை ஆட்டினான் அந்த இளைஞன்.


வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்," இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக,மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்து சொல்ல முடியவில்லை.ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்?.மனம் சுழல் விரைவு அதிகமாகிறபோது அது அலை.அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை.மன அலைச்சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனதிற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.
இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில்தான் இருக்கின்றன.அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்".                   



கொசுறு:


சிலைகளுக்கும் பக்தனுக்கும்
இடையில்தான் பூசாரி நிற்கிறான்
ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
நிச்சயமாக அவன் இல்லை
எங்கெங்கோ எதை எதையோ
தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
இதை அறிந்து கொண்டால்
பகுத்தறிவும் பெருகிப் போகும்
பூசாரிக்கும் தான் மனிதன் என்று
புரிந்தும் போகும்

சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்

இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
சத்தியமாக இல்லவே இல்லை
அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
"ஆனந்தர்களின்" வேஷங்களும்
முழுதாய் கலையும்

நம் நோக்கில் நாடுகளாய்

பூமியைப் பிரித்திருத்தலைப்போல்
அந்த ஆதி மூலம் தன்னை
பத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை
கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்

"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
பக்குவம் நமக்கும் வந்துவிடும்
வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்


No comments:

Post a Comment