Tuesday, 20 November 2012

எண்ணம் ஆராய்தல்!(Analysing thoughts)


நல்ல உச்சி வெயில், நடை பாதையின் அருகிலிருந்த கல்லின் மீது ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் .

அவ்வழியே சென்ற கூலியாள் ஒருவர்  உறங்கிக்கொண்டிருந்த நபரைப் பார்த்தார்.
வேலை செய்த அலுப்பு போலும் என்று நினைத்தார்.

வழியில் சென்ற பிச்சைக்காரர்  - தன்னைப்போல் ஒரு பிச்சைக்காரர்  பசியினால் மயங்கி கிடப்பதாக நினைத்தார்

அதே வழியில் திருடன் ஒருவன் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
உறங்கிகொண்டிருந்த நபரைப் பார்த்து , முதல் நாள் இரவில் எங்கேயோ திருடிவிட்டு  பகலில் தூங்கிக்  கொண்டிருப்பதாக நினைத்தான்.

அவ்வழியே சென்ற அரசியல்வாதி உறங்கிகொண்டிருந்த நபரைப் பார்த்து, கட்சித் தொண்டன் ஒருவன்  தண்ணியடித்துவிட்டு  படுத்துக்கிடப்பதாக  எண்ணினார்.

அவ்வழியில் சென்ற ஒரு சாது  - இவர்  முற்றும் உணர்ந்த ஞானியாகத்தான்  இருக்க வேண்டும். கொளுத்தும் வெயிலிலும் இரவு, பகல்  இல்லாமல்  தூங்கிக்  கொண்டிருக்கிறாரே  என வணங்கிவிட்டுச் சென்றார். 


வேதத்திரி மகரிஷி கூறுகிறார்:
"எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை – நாமே விரும்பி, முயன்று – மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்."
"எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்."
"தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்."


கொசுறு :


ஆசிரியர் கூறினார், மாணவர்களே நானும் உங்களில் ஒருவன். என்னை வேறுபடுத்தி எண்ண வேண்டாம்…!
சரிடா மச்சி! கீழே உட்காரு…!

2 comments: