Friday, 7 December 2012

குறளும், நட்பும்!

மாணிக்கனார்  கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியும், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார். மாணிக்கனார் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே எள்ளுருண்டை  கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.

திருவாத்தானும் பூங்குன்றனும் வெவ்வேறு  வகுப்பில் படிக்கும்  நண்பர்கள். பள்ளி முடிந்ததும் இருவரும் தெருவில் உள்ள திடலில் விளையாடுவார்கள்.அந்தகாலத்தில் இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் அதிகபட்ச உடை.

ஒரு நாள் திருவாத்தான், உபாத்தியாயர் சொல்லுவதைக் கவனிக்காது, மரத்தின் மேல் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும்  அணில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதை மாணிக்கனார் பார்த்து விட்டார்.அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை, மரக்கிளையிலேயே தொங்கிக் கொண்டிரு! என ஏற்றிவிட்டு விட்டார். திருவாத்தான் மரக்கிளையை இரண்டு கைகளால் பிடித்த படி தொங்கிக் கொண்டே இருந்தான். அவன் காலுக்கும், மண் தரைக்கும்  ஒரு அடி  அளவு இடைவெளி தான் இருக்கும். அவன் இறங்காமல் இருப்பதற்காக காலுக்கு கீழே நான்கைந்து எழுத்தாணியை வேறு குத்திவிட்டார்.

தொங்கிக் கொண்டே இருப்பதால் கைகள் வலியெடுக்கிறது. குதிக்கவும் வழி இல்லை. கட்டெறும்பு வேறு உடுப்புக்குள் சென்று வெளியே வந்து கொண்டிருக்கிறது.

அரைநாழிகை கழித்து உபாத்தியாயர், எழுத்தாணிகளை எடுத்து விட்டு அவனை இறக்கி விடுங்கள் என்று மற்ற மாணாக்கர்களிடம் உத்தரவிட்டு போய்விட்டார்.

திருவாத்தான்  கீழே இறக்கப்பட்டான். வெகு நேரம் கிளைகளைப் பிடித்திருந்ததால் இரு கைகளும் கீழே இறங்கவும் இல்லை, இறக்கவும் முடியவில்லை. அப்படியே வீட்டுக்கும் வந்து விட்டான். தாய், தந்தை, அக்கம் பக்கத்தவர் அனைவரும் கையை கீழே கொண்டுவர முயற்சிக்கின்றனர். முடியவேயில்லை.
மருத்துவர்  வந்து ஏதேதோ, தைலம், மூலிகையின் உதவியால் முயற்சித்துப் பார்த்தார், முடியவில்லை.
விசயம் தெரிந்து  திருவாத்தானின் நண்பன் பூங்குன்றன்  வீட்டுக்கு வந்தான். நிலைமையை பார்த்து விட்டு, இவ்வளவு தானா விசயம் என்று கூறிவிட்டு, படாரென்று இடுப்புத் துணியை இழுத்தான். அடுத்த விநாடி திருவாத்தானின் கைகள் தன்னையறியாமல் சடாரென்று கீழே இறங்கியது.

இதைத்தான் வள்ளுவர்
"உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" என கூறுகிறார்
அன்றும், இன்றும் நட்பு தான்  இடுக்கண் களைகிறது.

மகரிஷி கூறுகிறார், "மெய்ப்பொருள் விளக்க நிலையால் முழுமை பெற்ற அகன்ற அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கை நெறியை வகுத்த நூல்கள் உலகில் மிகச் சில. அவற்றில் சிறந்த ஓர் உயர்வைப் பெற்று மிளிர்வது வள்ளுவப் பெருந்தகை இயற்றிய திருக்குறள் ஆகும்".

இத்தகைய அரும் நூலை நாம் எந்த அளவிற்கு உதாசீனம் செலுத்துகிறோம் என்பதை ஒரு கவிஞன் வேதனையோடு பதிவு செய்கிறான்.

"இந்துக்களின் வீடுகளிலே தேவார,சமய நூல் இருக்கிறது
இசுலாமியர் வீடுகளில் குர்ரான் இருக்கிறது
கிறிஸ்தவர் வீடுகளில் வேதாகமம் இருக்கிறது
எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய திருக்குறள் நூலகத்திலே இருக்கிறது"



கொசுறு:

ஒரு மாணவன் தன் நண்பனிடம் கேட்டான், இந்த வாத்தியாருக்கு என்ன ஆச்சு?

ஏண்டா?

இப்பதான் போர்டுல திருக்குறள் எழுதிட்டு, திருகுறள எழுதினது யாருன்னு கேக்குறார்!.

No comments:

Post a Comment