Sunday, 9 December 2012

பொய்!

இரை தேட வந்த இடத்தில் கழுகுக்கும்,ஆந்தைக்கும் பயங்கர சண்டை.இரண்டும் கடுமையாக மோதிக் கொண்டன. கொஞ்ச நேரத்தில் களைப்பு மிகுதியால் இரண்டும் களைப்படைந்து அருகில் இருந்த மரத்தடியில் விழுந்தன.அப்போதுதான் இருவருக்கும் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு தோன்றியது. உடனே இரண்டும் சமாதானமாகப் போவது என்ற முடிவுக்கு வந்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டன.
"என்னுடைய குழந்தைகளை நீ பார்க்கவில்லையே... அடடா, என்ன அழகு!அவற்றின் கண் அழகும், இறக்கை அழகும் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும்.நான் இப்போது சொல்லியதை வைத்தே,என் குழந்தைகளை நீ எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்ளலாம்''என்றது ஆந்தை.அதைக்கேட்ட கழுகு, "அப்படியா?'' என்று வியந்து.
தாய்க்கு தனது குஞ்சுகள் அழகுதானே என்றது.
ஆந்தை சொன்னது, அப்படியில்லை எனது குஞ்சுகளின் கண்கள், இறக்கை,அலகு,கால் நகம் எதுவுமே மற்ற பறவைகளைவிட கூடுதல் அழகு தெரியுமா?அவைகளின் இறக்கைகளில் உள்ள நிறக்கலவையைப்  பார்த்தால் நான் கூறுவது உண்மை என விளங்கும் என்றது.
உண்மையில் இப்படியும் உண்டுமா? என சந்தேகத்துடன் 
கழுகு விடைபெற்றுக்கொண்டு தனது  இருப்பிடம் திரும்பியது.

ஒருநாள் மரப்பொந்து ஒன்றில் சில ஆந்தைக் குஞ்சுகளைப்
 பார்த்தது கழுகு.விழித்த கண் விழித்தபடி பயங்கரமான கண்களோடு இருந்த அந்த குஞ்சுகளைப் பார்த்ததும்,`இவை ஒருபோதும் தன் நண்பன் ஆந்தையின் குஞ்சுகளாய் இருக்க முடியாது.அவை அழகாக இருக்கும் என்றல்லவா ஆந்தை சொல்லிற்று?'என்று நினைத்தபடி, அந்த குஞ்சுகளை தின்று விட்டது.

அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஆந்தை,"அடப்பாவி, என் குழந்தைகளை இப்படி அநியாயமாகத் தின்று விட்டாயே'' என்று கோபத்துடன் கேட்டது.

"உன் குஞ்சுகள் அழகாக இருக்கும் என்றல்லவா நீ கூறினாய். அதனால் தான் அழகில்லாத இந்த குஞ்சுகளை நான் தின்று விட்டேன்.தவறு உன் மீது தான். நீ சொன்ன தேவையற்ற வர்ணனையால் தான் இப்படி நடந்து விட்டது.என்னை மன்னித்து விடு'' என்று ஆந்தையிடம் மன்னிப்புக் கேட்டது கழுகு.தான் சொல்லிய பொய்யால் குழந்தைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை எண்ணி வருந்தியது ஆந்தை.

"பொய் என்பது மாற்றுரை ஆகும். பொய் சொல்லாது வாழ்வதே ஆன்மீக உயர்வுக்கு வழி வகுக்கும். மெய் என்றால் ஒன்று பட்டது என்றும், பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும்.

பொய் என்றால் இல்லாததல்ல. ஒரு பொருளை ஒருவன் வைத்திருப்பதை அவன் மறைந்து விடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் பொருள் இல்லை என்று பொய் சொல்கிறான். இருக்கின்றது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டுபட்டு விட்டது. அதே பிளவு பட்ட கருத்து சொல்லிலும் வந்தால், அதைப் பொய் என்று சொல்கின்றோம்.

பொய் சொல்லாமல் வாழ வேண்டும்" என்கிறார் மகரிஷி.


 
கொசுறு:


தேர்தல் பரபரப்பு ஊரெங்கும்  உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று.  எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி ஓடோடி வந்தார்.  ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார்.  பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.
மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் அந்த விவசாயியிடம் கேட்டது.  எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?

விவசாயி சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள்.  ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .....அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று.

No comments:

Post a Comment