Monday, 10 December 2012

தன்முனைப்பு!(Ego)

 குரு ஒருவரிடம் பல சீடர்கள் இருந்தனர்.அதில் ஒரு சீடருக்கு "தான்" என்ற தன்முனைப்பு  அதிகம்.மற்ற சீடர்கள் முன்பு குருவை விட தான் அதிக புத்தகங்கள் படித்திருப்பதாகவும் தனக்குதான் அதிக விஷய  ஞானம் இருப்பதாகவும் காட்டிகொள்வான். அதனால் குரு  தன்னிடம் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும் கூறிக்கொள்வான். தவிர குருவிடம்   மற்ற சீடர்கள் முன்னிலையில் தேவையற்ற கேள்விகளைக்    கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
குரு ஒருநாள் தொந்தரவு செய்து கொண்டிருந்த அந்த சீடனிடம்  பட்டை தீட்டாத  ஒரு கல்லைக் கொடுத்து காய்கறி சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து, மக்கள் அந்த கல்லுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று தெரிந்து வரச் சொன்னார்.

சீடனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள்.

சீடன்
குருவிடம் வந்து, விபரம் கூறி அங்கு கல்லை பத்து பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான்.குரு அடுத்து அதே கல்லை தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதே போலக் கவனிக்க சொன்னார்.
சீடன் கடை வீதிக்கு சென்று, திரும்பி வந்து ''இங்கு பரவாயில்லை. இந்தக் கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள்'' என்றான்.
பின்னர்
குரு அவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார். அங்கு போய் வந்த சீடன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்''என்றான்.
குரு சொன்னார்,நீ கல்லை விற்கவில்லை என்றபோதும் விலை மட்டும் எப்படி கூடியது? ந்தக்  கல்லைப் போல்தான் நீயும் இருக்கிறாய். காய்கறி சந்தையில் இருக்கும்போது நீயும் அதன் மதிப்பு பத்து பைசாதான் என்று நினைத்தாய். இப்போது ஆன்மீகத்தில் நீ காய்கறி சந்தையில் தான் இருக்கிறாய். அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்து பைசா தான். உன் மனதை பட்டைதீட்டி அதை வைரம் விற்கும் விலையைப் போல உயர்த்து. இறைநிலை உணர்வு பெறும்போது  தன்முனைப்பு நீங்கி உன் மனம் முழுதும்  அன்பும் கருணையுமே நிறைந்திருக்கும்.மேலும் சந்தேகம் இருந்தால் விளக்க முயற்சிக்கிறேன் என்றார்.
அன்றிலிருந்து அந்தச் சீடன் அந்த குருவைத் தொந்தரவு செய்யாமல் ஆன்மீகத்தில் தன்னை  உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்தினான்.

"மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன.இந்நிலையைத்தான் ஆணவம் என்பார்கள்.நாம் இதனை "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.
இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி? அது அவ்வளவு எளிதானதா? அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா? இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு.மனிதன்தான் தனது தன்முனைப்புத் திரையை விலக்கிக்கொள்ள வேண்டும்.அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே.சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது" என்கிறார் மகரிஷி.  
  
கொசுறு :
"தன்முனைப்பு  உள்ளவனிடம் உள்ள ஒரே ஒரு நல்ல விசயம்
வேறு யாரைப் பற்றியும் அவன் பேசுவதில்லை"

No comments:

Post a Comment