Friday, 14 December 2012

கடவுளைத் தேடி!

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.
கழுதையில் அமர்ந்த அவர் அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார்.சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்தார்.
கழுதையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.
மீண்டும் கழுதையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.
அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.
அவர்களில் ஒருவர், "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்.
"என் கழுதையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் "கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்.

"கழுதையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே கழுதை இருக்கிறது. கழுதையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது"" என்றான் அவர்களில் ஒருவன்.
"நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா" என்று பதில் கேள்வி கேட்டார்.

அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள். 

"உன்னை அறிந்தால்" எனும் தலைப்பில் மகரிஷி பின்வருமாறு எழுதுகிறார்:

'உன்னையே நீ அறிவாய்' என்றார் சாக்ரடீஸ். 'நான் யார்' என்று கேள்வி கேட்கச் சொன்னார் ஸ்ரீரமணர். இந்த இரண்டு கேள்விகளையும் மேலோட்டமாகக் கேட்டு, மேலோட்டமாக பதிலையும் சொல்லிக்கொண்டு, மேம்போக்காக வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். அன்பர் ஒருவர், 'உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?' என்று என்னிடம் கேட்டார். 'கடவுள் இருக்க வேண்டுமா, கூடாதா? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். 'நம்மைக் காப்பதற்கும் நமக்கு நல்லது செய்வதற்கும் கடவுள் இருக்கத்தான் வேண்டும்' என்றார் அவர். உடனே நான், 'கடவுள் எங்கே இருக்கிறார், தெரியுமா?' என்றேன். அவர் கோயிலைக் காட்டினார்; ஆகாயத்தைக் காட்டினார்; இயற்கையைச் சுட்டிக்காட்டினார்; அருகில் அமர்ந்திருந்த அவருடைய அம்மாவையும் அப்பாவையும் காட்டி, 'இவர்களே என் தெய்வங்கள்' என்றார். அத்துடன் நிற்காமல், நான்காவது வரிசையில், ஒரு பெண்மணியின் மடியில் இருந்த ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி,  'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்றார். நான் மறுத்தவாறு தலையசைத்துக் கொண்டே இருந்தேன். கடைசியில், அயர்ச்சியும் அலுப்புமாக, 'நீங்களே சொல்லுங்கள் சுவாமி! கடவுள் எங்கேதான் இருக்கிறார்?' என்று கேட்டார். மெள்ளப் புன்னகைத்தபடி, 'கடவுள் இங்கே இருக்கிறார்; அங்கே இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். அவ்வளவு ஏன், உங்களுக்கு உள்ளேயும்கூட இருக்கிறார்!' என்றேன்.
''ஆம். கடவுள் என்பவர், உனக்கு உள்ளே இருக்கிறார்; அவருக்கு உள்ளேயும் இருக்கிறார்; இதோ... இந்த இளைஞனுக்கு உள்ளேயும், அதோ, அந்த மூதாட்டிக்கு உள்ளேயும் என எல்லா மனிதர்களிடமும் இருக்கிறார்; எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார். கடவுள் உனக்குள் இருப்பதுபோல் அவருக்குள்ளும் இருக்கிறார் என்றால், நீ வேறு அவர் வேறு இல்லை. பிரிவினை கிடையாது; ஏற்றத்தாழ்வு இல்லை; நீயும் அவரும் ஒன்றே! நீ உன்னிடம் காட்டுகிற அன்பையும் நேசத்தையும் அவரிடமும் காட்டு. ஏனெனில், அவர்தான் நீ; நீதான் அவர்! உன்னை அவராகவும் அவரை நீயாகவும் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும், தெரியுமா? உனக்குள் இருக்கிற உன்னை உற்றுப் பார்க்கவேண்டும். அதற்காகத்தான் இந்த எளிய பயிற்சிகள்!'' என்றேன். ஆம் அன்பர்களே, முதலில் நீங்கள் உங்களை உள்ளார்ந்து பார்க்கத் துவங்கிவிட்டால், பிறகு இந்த உலகத்தாரில் உங்களைக் காண்பீர்கள்!

கொசுறு :

என் மனைவி என்னை கடவுளா மதிக்கிறா!
அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க...

No comments:

Post a Comment