Wednesday, 12 December 2012

எல்லாம் துறந்தவர்!

அந்த ஊருக்கு அருகாமையில் ஒரு துறவி வசித்து வந்தார்.
அவரது ஆன்மீகப் பணி  அனைத்து தரப்பினருக்கும் 
பயனளிக்கும் வண்ணம் இருந்தது.அவரது 
அறிவுரைகளைப்  பெற மக்களின் கூட்டம் 
வந்தவண்ணமே இருந்தது.எல்லா மதத்தினரும் அவரது 
சித்தாந்தத்தை ஏற்று நடந்தனர்.
அதனால் அவரது புகழ் நாளுக்கு நாள் பெருகியது.
அதே ஊரில் ஒரு நாத்திகர் இருந்தார். அவரது கொள்கைப்படி துறவி ஒரு ஏமாற்றுக்கார வித்தகராகவே தெரிந்தார்.
துறவி ஒரு ஏமாற்றுப் பேர்வழியென்று அனைவருக்கும் 
தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஒரு நாள், துறவியை சந்திக்க காத்திருந்த பெரும் கூட்டத்தில் நாத்திகரும் அமர்ந்துகொண்டார்.
எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் துறவியிடம்,
ஐயா, இந்த ஊரில் தாங்கள் ஒருவர்தான் முற்றும் துறந்த  துறவி, ஞாநி என்று எல்லோரும் கூறுவது உண்மையா என்றார்.
அதற்கு அந்த துறவி பதில் கூறினார்:
யார் சொன்னது, என்னைவிட உயர்ந்த துறவி, இந்த
ஊரில் அதுவும் இந்தக் கூட்டத்திலேயே  இருக்கிறார் என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும்  யாரைக் குறிப்பிடுகிறார் என ஆவலாய் துறவியை நோக்கினர்.
துறவி நாத்திகரைப் பார்த்துச்  சொன்னார் :
என்னை விடப்பெரிய துறவி நீங்கள்தான்,  ன்னைப் போன்ற துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம், நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே... என்றார்.
நாத்திகர் புன்னகைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.


மகரிஷி அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.திராவிடர் கழகதைச் சேர்ந்த ஒரு அன்பர்
மகரிஷியிடம் வந்தார். “ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று  சொல்லி எங்களை  எல்லாம்
பக்குவப் படுத்தி விட்டுப்
போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.
ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம்
என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார்.
“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில்
ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர்
எதிர்த்தார்.  அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.
நானும் அதைத்தான் சொல்கிறேன்.  இறைவன்
எங்கும் நிறைந்த பரம்பொருள்.அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து
மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக
உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன். கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது
போல மக்கள் மனத்தைப் பண்படுத்தி சீர் செய்யும்
வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன்.
இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

கொசுறு :


“தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”

No comments:

Post a Comment