Monday, 24 December 2012

ஆத்திகமும் நாத்திகமும்!




ராமலிங்கம்  எனது நெருங்கிய நண்பன்.எங்கள் இருவருக்கும் நிறைய விடயங்களில் உடன்பாடு உண்டு ஆன்மீகம்  ஒன்றைத் தவிர.ஆன்மீகத் தேடலில் அவனது  சமீபத்திய கண்டுபிடிப்பு  "பூஜிய ஸ்ரீ கல்யாண் சுவாமிகள்".
பக்த கோடிகள் மத்தியில் சுவாமிஜி  மிகவும் பிரபல்யமானவர்.அவரது ஆன்மீகச்  சொற்பொழிவு,வேத பாராயணம், 
இதிகாச விளக்கவுரை,மந்திர உச்சாடனம்,பல மொழிகளில் அவர் எழுதிய
ஆன்ம விசார நூல்கள் இவையனைத்தும்  உலகமெங்கும் 
அவருக்கு சிஷ்யர்களையும், பக்தர்களையும்  தேடித் தந்தது.
சுவாமிஜி  நடாத்திய  "மந்திரம் " பயிற்சிப் பட்டறைக்குச் சென்றதிலிருந்து ராமலிங்கம் வெகு உற்சாகமாய் இருந்தான்.எப்போது பார்த்தாலும் சுவாமிஜி  பற்றித்தான் பேச்சு.அவர் செய்த அற்புதங்கள் பற்றி பெரிய பட்டியல் கொடுத்தான்.கொடிய நோய் உள்ளவர்கள்கூட  
நொடியில் குணமடைந்ததை நேரில் பார்த்ததாய் கூறினான். 
சுவாமிஜியைச்   சந்திக்கும் நாத்திகர்களும் கடவுள் பக்தியுள்ளவர்காக மாறிவிடுவார்களாம்.சுவாமிஜிக்கு, எல்லா நாடுகளிலும் பக்தர்களும் சீடர்களும் இருந்தார்கள், அவர் விஜயம் செய்யாத நாடே  இல்லை.குடும்பம், வீடு வாசல் சொத்துப் பத்துக்களை விட்டுவிட்டு ஆன்மீக தரிசனத்திற்காக சுவாமிஜியுடன் ஐக்கியமானவர்கள் பலபேர்.    
பல ஊர்களில் சுவாமிஜியின் பெயரில்  ஆசிரமங்கள், பள்ளிகள்,கல்லூரிகள்,இலவச மருத்துவமனைகள்,அநாதை இல்லங்கள் ஆரம்பமாயின.  
அவர் மந்திரம் சொல்லிக் கையை நீட்டினால்  குங்குமமும் திருநீறும் கொட்டுகிறது, அதுமட்டுமா, அவரைப்போல்  வாயிலிருந்து ஸ்வர்ணலிங்கம்
எடுப்பது யாரால் முடியும்?  இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள்.ராமலிங்கம் சுவாமிஜியின்  பரம பக்தனாகி விட்டான். பிரதான சிஷ்யர்களுக்கு கிடைக்கும் சுவாமிஜியின் உருவம் பொறித்த சங்கிலி, முதல் சந்திப்பிலேயே ராமலிங்கத்திற்கு கிடைத்துவிட்டது. 
ஒரு நாள், சுவாமிஜி  எங்கள் ஊரில்  எழுந்தருளியிருப்பதை ராமலிங்கம் ஓடி வந்து என்னிடம் கூறினான். 
சுவாமிஜியை  வந்து தரிசிக்கும்படி, அவனது நச்சரிப்பும்  தொடங்கியது.



நண்பனின்   தொல்லை தாங்காமல் சுவாமிஜியைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன்.

என்னை சுவாமிஜி  இருந்த இடத்திற்கு ராமலிங்கம் அழைத்துக் கொண்டு போனான்.அவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் காத்துக்கொண்டிருந்தது.வரிசையில் பல பேர் சுவாமிஜிக்கு   பாத பூஜை செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒருவரிடம் ராமலிங்கம் காதருகே
ஏதோ சொல்ல,அந்த நபர் என்னை சுவாமிகளிடம்  அழைத்துச் சென்றார்.   
சுவாமிஜி   சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார்.பாத பூஜை செய்யக் கட்டணம்   ரூபாய் பத்தாயிரம் என அருகிலிருந்த
நபர் கிசுகிசுத்தார்.எனது முக மாற்றத்தைக் கவனித்த ராமலிங்கம், 
ஒ! கட்டணமா? சுவாமிஜி பெயரில்  பெரிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட உள்ளது, அதற்காகத்தான் வசூலிக்கிறார்கள் என்றான்.
பாத பூஜை முடிந்தது, சுவாமிஜி   தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார். பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. "செயல்களின் பலனைத் துறந்தவனே உண்மையான கர்ம யோகி, அப்படிப்பட்டவன் பரிபூர்ண உள்ளார்ந்த பக்தியில் திளைக்கிறான், இன்ப துன்பங்கள் அற்று, அவற்றை சமமாக பாவிக்கும் மன நிலையை பெறுகிறான். 'ஸ்தித ப்ரக்ஞன்' நிலையில் இருந்து கொண்டு செயல்களை செய்கிறான்" என  அழகாக விவரித்தார். உரையாற்றிகொண்டிருக்கும்போதே  அவர் பின்னால் சுழன்றுகொண்டிருந்த  மின்விசிறி  திடீரென்று நின்று போனது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமற்   சிறிது நேரம் திணறினான். சுவாமிஜிக்கு  வியர்த்தது, சில நிமிடங்களில் தவித்துப் போன சுவாமிஜி   அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொரு சிஷ்யன் ஓடோடி வந்து மின்விசிறியைச் சரி செய்தான். ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.
ஒரு வழியாக மின் விசிறி சுழல  அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிஜியைப்    புகைப் படம் எடுக்கத் துவங்கினார். அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிஜியின்  பேச்சு கீதையிலும், கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு நான்காவது அத்தியாயத்தில் உள்ள சுலோகத்தை அழகாகச் சொன்னார்.



"பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்"என்றார்.

ராமலிங்கம் தன்னை மறந்து உரையைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
சுவாமிஜியின் உரை  முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிஜியின்  பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள்.
மகா யோகி, பிரம்ம முனி, 
மகரிஷி  என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிஜி   மலர்ந்த முகத்துடன் அதை கேட்டுகொண்டிருந்தார்.தன்னைப் புகழ்ந்து  பேசிய சில பக்தர்களை அழைத்து தனது உருவம் பதித்த சங்கிலியைத் தந்து ஆசிர்வதித்தார்.  
ராமலிங்கம்  எதிர்பாராத விதமாக  எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிஜியின்  சிஷ்யன் ஆகியது  எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்தியிருக்கலாம். என்னைச் சுட்டிக்காட்டி, "இவன் என் நண்பன், அவனையும் தங்கள் சிஷ்யனாக  ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிஜியை  நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.

எனக்கு தர்மசங்கடமாய் இருந்தது.எனது தயக்கத்தைக் 'கூச்சம்' என நினைத்து, சுவாமிஜி  பெருந்தன்மையோடு என்னைப் பேச அழைத்தார்.

"மன்னிக்கணும். எனக்கு உங்கள் சிஷ்யன் ஆகவேண்டும் என்ற  எண்ணமே இல்லை. எனக்கு முன்பு பேசியவர்கள் போல் என்னால் பேச முடியாது. என் மனதில்  பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக சொன்னவுடன், சுவாமிஜி  அருகிலிருந்த   பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார்.எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக்காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்திருக்கலாம்.

அதற்கு மேல் நான்  தயங்கவில்லை. "சுவாமிஜி,  ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு யோகி அல்லது  மகான்  ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை தவிர


தனிமனித வழிபாடு ஆன்மாவை விழிப்பு நிலைக்கு கொண்டு செல்லாது".

நான் இப்படிச்  சொல்வேன் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிஜி  முகம் கறுத்தது. அவரது சிஷ்யர்களில் ஒருவர்  பதில் சொல்ல விரைந்து வந்தார்.

"வேதங்களையும் உபநிஷத்துகளையும், தேவாரம் திருவாசகங்களையும் கரைத்துக் குடித்த சுவாமிஜியை  சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி?" கூட்டத்தில் ஒரு பக்தர் குரல் எழுப்பினார்.

சுவாமிஜியின்  முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.

"என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவையனைத்தும்  என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் குருவாக நினைக்க முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்  தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் பலர் இந்த மண்ணில் இருந்தார்கள், இன்னமும் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்  அடையாளம் இல்லாமல்...."

மேலே என்னைப் பேச விடாமல் சுவாமிஜியின்  சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த இடம்  கிட்டத் தட்ட ஒரு சட்டசபை போல  மாறியது. நான்  அமைதியாக அங்கிருந்து வெளியேறினேன்.ராமலிங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் என்னைத்  தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க பூஜிய ஸ்ரீ கல்யாண்  சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்" என்றார்.
எதுவுமே நடவாதது போல் அவரது சிஷ்யர்கள், பாத பூஜைக்கு தயாராய் வந்திருக்கும் பக்தர்களை 
குரல் கொடுத்து அழைக்க ஆரம்பித்தார்கள்.அங்கு மக்களின்  கூட்டம் அலைமோதியது.

தூரத்தில் ஒரு கவிஞனின் குரல் கேட்டது:
உண்மையான ஆத்திகன் என்பவன்
நாத்திகனே!
அவனே மெய்யையும் (உடல்)
மெய்யையும் (உண்மை) உணர்ந்தவன்!

உண்மையான நாத்திகன் என்பவன்
ஆத்திகனே!
அவனே தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன்!
ஆத்திகன் இருப்பதை தேடுகிறான்
நாத்திகன் இல்லாததை தேடுகிறான் .
தேடுபவன் மனிதன்!
தேடாதவன் புத்தன்!

வேதாத்திரி மகரிஷி எழுதுகிறார் 
இயற்கையமைப்பை அதன் ஆதி நிலையிலிருந்து அறிவின் எல்லை வரை
அறிந்து கொள்வதே தத்துவ விளக்கம் எனப்படும்.தத்துவ விளக்கம் 
பெற்றவன்இயற்கையே எல்லாமாகவும்,தானுமாகவும் இருக்கும்
உண்மையை உணர்ந்து கொள்கிறான்.அவன் வேறு, இயற்கை வேறு 
என்றில்லாத பேதமற்ற நிலையை உணர்ந்து கொண்டால் அவனுக்கு 
அப்பாலும், அவனுக்கு அன்னியமாகவும், ஏதுமில்லை என்று 
தெளிவடைகின்றான்.இந்தத் தெளிவே நாத்திகம் எனப்படும்.
இந்த நிலையை ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வயது வந்தோர் 
எல்லோரும் அறிந்தால் அல்லாது மனித இன வாழ்வின் அமைதியும், 
இன்பமும் நிலைப்பதற்கில்லை.எனவே பல்வேறு அறிவு 
நிலைகளில் வாழும் உலக மக்கள் இயற்கையின் பூரண நிலையை அறிய 
வேண்டிய அவசியத்தையும், வழிகளையும் சொல்லுகிறான்.அறிந்து கொள்ள
முடியாத அறிவின் நிலையில் உள்ளவர்களுக்கு ஆசையும்,அச்சமும் ஊட்டும்
பல கற்பனைகளின் மூலம் அந்நிலையை நாட வழி செய்கின்றான்.
இவ்விதம் மக்கள் நம்பிகை மீது  நல்வாழ்வு காண வகுக்கும் முறைகளே பக்தி மார்க்கம் அல்லது ஆத்திகம் ஆகும்.
ஆகவே, பூரண விளக்கம் பெற்றவனே நாத்திகன்.அவன் பரப்புவதே ஆத்திகம் ஆகும்.நாத்திகம் என்பது உண்மையை உணர்ந்த நிலை.ஆத்திகம் என்பது உண்மையை உணர மனிதனை நம்பிக்கை மூலம் பக்குவப்படுத்தும் வழி.
நாத்திகம் பரப்பக் கூடியதன்று, உணரக் கூடியது.ஆத்திகமே பரப்பக் கூடியது.
அதன் முடிவில் காயே பழமாவது போல் அதுவே நாத்திகமாக மாறிவிடும்.
அறிவின் மயக்கத்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பேசப்படும்
ஆத்திகமும்,நாத்திகமும் பயனற்றவை மட்டுமல்ல,பலவிதமான தீமைகளை 
விளைவிப்பனவாகும்.


கொசுறு 1:

ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுங்கறது பெரியவுக சொன்னது.
ஆத்திகமும் நாத்திகமும் ஒன்னு. இது ரெண்டுமே  நீசத்துல இருக்கும்போது கடவுளை பத்திப்  பேசும். 
உச்சத்துக்கு போகும்போது மனிதனைப் பத்தி பேசும்.

கொசுறு 2:

மறுக்க முடிந்தவர்களுக்கு நாத்திகம்!
உணர முடிந்தவர்களுக்கு ஆத்திகம்!
இடையில் உள்ளவர்களுக்கு சௌகரியம்
!

Sunday, 23 December 2012

வாழ்க்கைத் தத்துவம்!

குருவிற்கு வயது அதிகமாகிவிட்டது.எழுந்து நடக்க முடியாத நிலை.படுக்கையில் அன்ன ஆகாரம் இன்றி அவர் இருக்கும் நிலையறிந்த  அவரது சீடர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
குரு சமாதி அடைந்து விட்டால், பிறவியின் நோக்கத்தை யார் நமக்கு உணர்த்துவது?
பிறவிக்கடல் நீந்த யார் துணை புரிவது? இப்படிக், குழப்பமான நிலையிற்   சீடர்கள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.
சீடர்களின் மன நிலையைப் புரிந்துகொண்ட குரு, அனைவரையும் தனதருகில் அழைத்தார். அப்போது அவரது பிரதான சீடர்களில் ஒருவன் “குருவே! எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும், “வாழ்க்கையின் தத்துவம் என்ன?" என்று கேட்டான்.
"உங்கள் அனைவருக்கும் வாழ்கையின் தத்துவத்தை  விளக்க இருக்கிறேன், சீடர்களே வாழ்கையின் தத்துவம் 
இதுதான்" என்று கூறித்  தனது 'பொக்கை வாயைத்' திறந்து காட்டினார்.அனைவரும் குருவின் வாயைப்  பார்த்த பின்னர் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.
சீடர்களிற்   சிலர்  “குருவிற்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது. எதையோ கேட்டால் எதையோ காட்டுகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
ஆனால், கேள்வி கேட்ட சீடனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
குருவின் வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது என்று குழம்பிப் போனான். மெதுவாகக் குருவை அணுகி அவரிடம் “குருவே! எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே, அப்படி என்னதான் தங்கள் வாயில் இருக்கிறது”? என்றுக் கேட்டான்.
அதற்கு அவர் “என் வாய்க்குள் என்ன தெரிந்தது?"என்று வினவினார். அவனோ “நாக்கு மட்டும்தான் தெரிந்தது” என்று கூறினான்.
'பல் இருந்ததா?' என்று கேட்டார். அவனோ 'இல்லை' என்றான். அதற்கு அவர், "அதுதான் வாழ்க்கையின்  தத்துவம். பல் வன்மையானது. அழிந்து போனது. நாக்கு மென்மையானது அழிந்து போகவில்லை. இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று கூறி “வன்மையானது அழியும்,மென்மையானது வாழும். இதுதான் வாழ்க்கையின் தத்துவம்” என்று விளக்கிக் கூறினார்.
ஒரு கவிஞன் வாழ்க்கைத் தத்துவம் பற்றி எழுதுகிறான்,

"விடியும் வரை தெரிவதில்லை  கண்டது கனவு என்று...
வாழ்க்கையும் அப்படிதான்...
முடியும் வரை தெரிவதில்லை...
வாழ்வது எப்படி என்று...."  

ஆனால் வேதாத்திரி மகரிஷி தெள்ளத் தெளிவாய் வாழ்க்கைத் தத்துவம் பற்றி  விவரிக்கிறார்
"வாழ்க்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்திற் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில்   அகப்பட்ட துரும்பின் நிலை போலாகும்.

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்த வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோற்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்"
என்கிறார்.

கொசுறு:

மச்சி....வாழும்போது 'Backup' எடுக்க முடியும்
ஆனா, வாழ்க்கைய 'Backup' எடுக்க முடியாது
இதுதான் வாழ்கைத் தத்துவம்
ஆகவே...வாழும்போது அனுபவித்து வாழக் கற்றுக்கொள்!

Monday, 17 December 2012

கவலை ஏன்? (Worry?)


செல்வந்தர்  ஒருவருக்கு எப்போதுமே கவலை. ஒரு நாள் அவர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன்.ஆனாலும் மனதில் நிம்மதியில்லை. கவலையைப்  போக்கவும் நிம்மதி பிறக்கவும்  வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதல்லவா! கடமையுணர்வுடன், எதிர்பாராமல் மனப்பூர்வமாக தானம் செய்,'' என்றார் துறவி.
செல்வந்தரும்  தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு ஏழை ஒருவருக்கு  பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று ஆலயத்திற்கு  நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், இன்று பத்துப்  பேருக்கு அன்னதானம் வழங்கினேன், இன்று ஏழைகளுக்கு    உடுப்பு வழங்கினேன் ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார்.
துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை அநாதை இல்லத்திற்கு தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.

""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம்    செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார்.செல்வந்தரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.
""ஆம்'' என்ற செல்வந்தரிடம், ""வெயிலில் இருந்து தப்ப உமது  நிழல் மீது காலை ஊன்றும்,'' என்றார். செல்வந்தரும் காலை ஊன்ற நிழல் சற்று தள்ளிப்போனது.
""செல்வந்தரே! உமது நிழல் கூட இந்த உலகத்தில் உமக்கு உதவவில்லை. நீர் சேர்த்து வைத்துள்ள பணம் எவ்வகையில் உதவும்!.எதிர்பார்த்து உதவி செய்யும்

எந்தக்  காரியமும் இப்படித்தான்.
நாம் செய்யும் தானத்தை, பிறருக்குச்  செய்யும் உதவியை  கடமையுணர்வுடன் மனப்பூர்வமாய் உள்ளன்போடு செய்தல் வேண்டும்.அப்படிச் செய்தால் கவலை போய், நிம்மதி தானாக வரும்.நாமாக  அதைத் தேடி அலைய  வேண்டியதில்லை என்றார்""

செல்வந்தர் சொன்னார், சுவாமி ! தாங்கள் எதையுமே எதிர்பாராமல்தான்  இந்த தவ வாழ்க்கையை  மேற்கொண்டீர்களா?என்று கேட்டார்.

எதிர்பார்த்துச் செய்வது தவமும்  அல்ல துறவும் அல்ல.துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் எவருமே யாசிப்பதற்காக  துறவறம் மேற்கொள்வதில்லை,தவமும் செய்வதில்லை.துறவு என்பது கடமையறம், இதை உணராதவர்களே அறியாமையில் சிக்கித் தவிக்கிறார்கள். கடமையறம் உணராத  மனிதர்கள்  இறைவனை வணங்கும்போது பிரதிபலனை எதிர்பார்த்து வணங்குகின்றார்கள்.எனக்கு சுகத்தைக் கொடு, பணத்தைக் கொடு, பிள்ளையைக் கொடு என சுயநலத்துடன் வேண்டுதல் நடத்துகிறார்கள். நாமே இறைநிலையின் அங்கமாக இருப்பதை உணர்ந்தபின் யாரிடம் நாம் கையேந்தி  யாசிப்பது?.அணுவிற்குள்ளும்  இறைத்தன்மையை உணர்ந்தோர், அணுத் துகள்களில் பரிபூரணத்தை உணர்ந்தோர் கடமையுணர்வுடன்  வாழப்  பழகிக்கொள்வார்கள் என்றார் துறவி.

சுவாமி! நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க? தனது அடுத்த கேள்வியைக் கேட்டார்  பணக்காரர்.

மனிதன் தனியாக இல்லை, சமுதாயத்தின் அங்கமாகவே இருக்கிறான், மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறான்.ஒருவரை ஒருவர் இணைந்து பிண்ணப்பட்டதுதான் நாம் காணும் சமுதாயம்.செயல் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் உதவி செய்பவன், உதவி பெற்றும் செல்வான் என்றார் துறவி.
விளக்கம் பெற்ற சந்தோசத்தோடு, செல்வந்தர்  துறவியை வணங்கிவிட்டு,  உள்ளன்போடு மனப்பூர்வமாய் எளியோருக்கு உதவிசெய்யக் கிளம்பினார்.   

"கவலை ஏன் " என்பதை வேதாத்திரி மகரிஷி பின் வருமாறு விளக்குகிறார்:
"பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றிக் கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கையின் நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக் கொள்ளாமல், ஏற்படும் மனப்பிணக்கு தான் கவலை. இங்கு கடமைகளை ஒட்டி, செயல்களையொட்டித் திட்டமிட்ட விளைவுகளை எதிர்பார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும்"



கொசுறு:

உன்னை யாராவது
லூசுன்னு சொன்னா
கவலைப்  படாதே!
வருத்தப்  படாதே!
ஃபீல் பண்ணாதே!

கன்னத்தில் கை வைக்காதே!
உங்களுக்கு  எப்படித்
தெரியும்னு  கேள்!

இல்லறமும் துறவறமும்!

துறவி ஒருவர் இருந்தார். எப்போதும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருப்பார்; இரவில் அங்கேயே படுத்துக்கொள்வார்.

எப்போது அவர் அந்த ஊருக்கு வந்தார் என்று யாருக்கும் சரியாக நினைவில்லை; எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளைத் தாண்டி இருப்பார் என்று ஊர்மக்கள் ஊகித்தார்கள்.

எப்போதும் அமைதியாகவே இருப்பார்; யாரிடமும் பேசுவதில்லை. பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஓரிரு சொற்கள் பேசுவார்; பேசியவுடன் மீண்டும் அமைதியாகி விடுவார்.

ஒரு நாள் அந்தக் கோவிலுக்குப் புதிய துறவி ஒருவர் வந்தார்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த முதிய துறவியை வணங்கினார்.

“சுவாமி, நான் தொலைவிலிருந்து வருகிறேன்; இங்குத் தங்கிக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உடன்பாட்டுக்கு அடையாளமாகத் தலையை அசைத்தார் முதிய துறவி.

அன்றிலிருந்து அந்த இளந்துறவிக்கும் கோவில் மண்டபமே இருப்பிடம் ஆகியது.

சில திங்கள் கழிந்தன.

தம் வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் இளையவரிடம் பேசத் தொடங்கினார் முதியவர்.

“நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?” என்று கேட்டார்.

“வாழ்க்கையே வெறுத்துவிட்டது, சுவாமி! திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன்; முடியவில்லை. எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டன. ஒவ்வொரு முறையும் என்ன என்னவோ தடைகள்! எவ்வளவு காலம்தான் முயற்சி செய்வது? வெறுத்துவிட்டது. எனக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை; அதனால்தான் துறவியானேன். மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஆமாம், தாங்கள் துறவி ஆனது ஏன் சுவாமி?” என்று கேட்டார் இளையவர்.

“எனக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்; அதனால்தான்!” என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் அமைதியானார் முதிய துறவி.

"இல்லறமும் துறவறமும்" பற்றி மகரிஷி பின் வரும் பாடலில் எழுதியது  

"இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்   
இதுவரையில் கருதி வந்தார்  உலகமக்கள்   
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தை பண்படுத்தி எனையறிந்தேன் 
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பம் துன்பம் உடலுயிர்  தத்துவம் உணர்ந்து
இல்லறத்தை திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்

இல்லறத்தில் மெய்ஞானம் விளங்கி வாழ
இயலாத காலமொன்று இருந்ததுண்டு
இல்லறத்தை விட்டு பலர் துறவை நாடி
எங்கெங்கோ சுற்றி அலைந்தார் அந்நாளில்
இல்லறத்தில் கடமை செய்தே தவம் பயின்று
இறை நிலையை அறியும் முறை கண்டுகொண்டோம்
இல்லறமும் துறவறமும் ஒன்று சேர்ந்து
இணைந்த  உயர் ஆறாம் கண்டோம் மகிழ்ச்சி பெற்றோம்"




கொசுறு:

ஆசையை அடக்குவது எப்படி?

அது முடியாமல்தானே சாமியார் ஆனேன் அப்பனே!

Sunday, 16 December 2012

கண்மூடித்தனம்!

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் பறப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் பறக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.
துறவி ஒவ்வொருநாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லித்தருமாறு கேட்டனர்.

அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்றுத் தருவதாக சொன்னார். அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது அவனால் ஏன் முடியவில்லை என கேட்டார்கள். 

 அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன் என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்,
அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்துசென்றுவிட்டது என்றார்.

கண்மூடித்தனமாக  பின்பற்றுவதன் விளைவு இதுதானோ?.
எல்லாவற்றிற்கும் கேள்வி எழுப்பவேண்டும்.கேள்வி ஆராய்ச்சியைத் தூண்டும்.ஆராய்ச்சி தெளிவைத் தரும்.

மகரிஷி எதையும் சொல்லால் மட்டும் நம்பாமல்  சிந்தித்து தெளிவு பெற வேண்டும் என்கிறார்.பின்வரும் அவரது இறைவணக்கப் பாடல் இதை விளக்குகிறது:

"எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்

வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி"


சுருக்கமாகச் சொன்னால் மகரிஷி அனைவரையுமே சிந்தனையாளர்களாக,ஆராய்ச்சியாளர்களாக, உணர்வாளர்களாக  வேண்டுமென்கிறார்.

**இப்பாடல் பற்றித்  தனியாகவே பதிவு தேவை** 

 
கொசுறு :
ஆலயம் ஒன்றில் திருமணம்  நடந்து கொண்டிருந்தது.
வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி,தனது அம்மாவிடம் கேட்டாள்

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா?
அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'

'அப்ப,மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட்  சூட்
போட்டுருக்காரு?'??????

Friday, 14 December 2012

கடவுளைத் தேடி!

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.
கழுதையில் அமர்ந்த அவர் அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார்.சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்தார்.
கழுதையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.
மீண்டும் கழுதையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.
அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.
அவர்களில் ஒருவர், "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்.
"என் கழுதையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் "கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்.

"கழுதையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே கழுதை இருக்கிறது. கழுதையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது"" என்றான் அவர்களில் ஒருவன்.
"நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா" என்று பதில் கேள்வி கேட்டார்.

அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள். 

"உன்னை அறிந்தால்" எனும் தலைப்பில் மகரிஷி பின்வருமாறு எழுதுகிறார்:

'உன்னையே நீ அறிவாய்' என்றார் சாக்ரடீஸ். 'நான் யார்' என்று கேள்வி கேட்கச் சொன்னார் ஸ்ரீரமணர். இந்த இரண்டு கேள்விகளையும் மேலோட்டமாகக் கேட்டு, மேலோட்டமாக பதிலையும் சொல்லிக்கொண்டு, மேம்போக்காக வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். அன்பர் ஒருவர், 'உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?' என்று என்னிடம் கேட்டார். 'கடவுள் இருக்க வேண்டுமா, கூடாதா? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். 'நம்மைக் காப்பதற்கும் நமக்கு நல்லது செய்வதற்கும் கடவுள் இருக்கத்தான் வேண்டும்' என்றார் அவர். உடனே நான், 'கடவுள் எங்கே இருக்கிறார், தெரியுமா?' என்றேன். அவர் கோயிலைக் காட்டினார்; ஆகாயத்தைக் காட்டினார்; இயற்கையைச் சுட்டிக்காட்டினார்; அருகில் அமர்ந்திருந்த அவருடைய அம்மாவையும் அப்பாவையும் காட்டி, 'இவர்களே என் தெய்வங்கள்' என்றார். அத்துடன் நிற்காமல், நான்காவது வரிசையில், ஒரு பெண்மணியின் மடியில் இருந்த ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி,  'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்றார். நான் மறுத்தவாறு தலையசைத்துக் கொண்டே இருந்தேன். கடைசியில், அயர்ச்சியும் அலுப்புமாக, 'நீங்களே சொல்லுங்கள் சுவாமி! கடவுள் எங்கேதான் இருக்கிறார்?' என்று கேட்டார். மெள்ளப் புன்னகைத்தபடி, 'கடவுள் இங்கே இருக்கிறார்; அங்கே இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். அவ்வளவு ஏன், உங்களுக்கு உள்ளேயும்கூட இருக்கிறார்!' என்றேன்.
''ஆம். கடவுள் என்பவர், உனக்கு உள்ளே இருக்கிறார்; அவருக்கு உள்ளேயும் இருக்கிறார்; இதோ... இந்த இளைஞனுக்கு உள்ளேயும், அதோ, அந்த மூதாட்டிக்கு உள்ளேயும் என எல்லா மனிதர்களிடமும் இருக்கிறார்; எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார். கடவுள் உனக்குள் இருப்பதுபோல் அவருக்குள்ளும் இருக்கிறார் என்றால், நீ வேறு அவர் வேறு இல்லை. பிரிவினை கிடையாது; ஏற்றத்தாழ்வு இல்லை; நீயும் அவரும் ஒன்றே! நீ உன்னிடம் காட்டுகிற அன்பையும் நேசத்தையும் அவரிடமும் காட்டு. ஏனெனில், அவர்தான் நீ; நீதான் அவர்! உன்னை அவராகவும் அவரை நீயாகவும் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும், தெரியுமா? உனக்குள் இருக்கிற உன்னை உற்றுப் பார்க்கவேண்டும். அதற்காகத்தான் இந்த எளிய பயிற்சிகள்!'' என்றேன். ஆம் அன்பர்களே, முதலில் நீங்கள் உங்களை உள்ளார்ந்து பார்க்கத் துவங்கிவிட்டால், பிறகு இந்த உலகத்தாரில் உங்களைக் காண்பீர்கள்!

கொசுறு :

என் மனைவி என்னை கடவுளா மதிக்கிறா!
அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க...

Thursday, 13 December 2012

சும்மாயிரு!


ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது நின்று கொண்டிருந்தார்,தன்னந்தனியாக,அசையாமல்.காலை உலா வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.ஒருவர் சொன்னார்,''காணாமல் போன பசுவை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் ,''அடுத்தவர் சொன்னார்,'இல்லை,அவர் நிற்கிற விதத்தைப் பார்த்தால் அவர் எதையும் தேடுவதாகத் தெரியவில்லை.அவர் தன் நண்பர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறார்,'மூன்றாமவர் சொன்னார்,''நண்பர்களுக்காகக் காத்திருந்தால் அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டும்.அவர் அசையவே இல்லை.அவர் தியானம் செய்கிறார்.''
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,அவரிடமே விவரம் கேட்க,சிரமப்பட்டு மலை உச்சிக்குச் சென்றனர்.
முதலாமவர் கேட்டார்,''காணாமல் போன உங்கள் பசுவைத் தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?''
சந்நியாசி கண்களைத் திறந்தார்.''எனக்கு சொந்தம் என்று எதுவும் இல்லை.அதனால் எதுவும் காணாமல் போகவில்லை.எதையும் நான் தேடவும் இல்லை.''
'அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?'என்று இரண்டாமவர் கேட்டார்.
''நான் தனியன்.எனக்கு நண்பர்களும் இல்லை.பகைவர்களும் இல்லை.அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?''என்றார் சந்நியாசி.
''அப்படியானால், நான் நினைத்தது தான் சரி.நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்?''என்று கேட்டார் மூன்றாமவர்.
சந்நியாசி சிரித்தார்.''நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்.எனக்கு சாதிக்க வேண்டியது எதுவுமில்லை.எதற்காக நான் தியானம் செய்ய வேண்டும்?''என்று கேட்டார்.


அப்புறம் மூவரும்,''பிறகு நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டனர்.
''நான் எதையுமே செய்யவில்லை.நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன்.''என்று சொல்லி சிரித்தார் சந்நியாசி.


"சும்மா இரு" இதை அடுத்தவருக்குச்  சொல்லுவது எளிது!.
ஆனால் அப்படியிருப்பது யாருக்கும் எளிது இல்லையென்பது அனைவரும் அறிந்ததே.
மகரிஷியோ தனது குரு வணக்கப் பாடலில், 

"சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே" என்கிறார்.


"சும்மா" இருந்தால்தான் அறிவின் நிலையை உணர முடியும், உயர முடியும் என்கிறார்.
 

**திட்டும்போது  கூறும் "சும்மா இரு" என்பதற்கு விளக்கம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்**

கொசுறு:

மரண பயமில்லை
அதனால் மதத்தின் மீது பயம் இல்லை
தேவைகள் இல்லை.
அதனால் இறைவனிடம் வேண்டுதல் இல்லை
முக்தி தேவையில்லை.
அதனால் இறைவனைத்  தேடவில்லை
தேடுமிடமேல்லாம் காற்றாக இருக்கிறது
பார்க்குமிடமெல்லாம் ஒளியாக இருக்கிறது
பார்ப்பது இறைவனை
சுவாசிப்பது இறைவனை
சஞ்சரிப்பது அவனுடன்
பின்னர் அவனை எங்கே தேடுவது?

ஆகவே...சும்மாயிரு!

கடவுள் எப்படி உருவானார்!


முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே ? என்றான் அவருடைய பிரதான சீடன்.
நான் சொல்கிறேன்,ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார்  குரு.
எனக்குப் புரிகிறார்ப்போல் சொல்லுங்களேன்  என்றான் சீடன். சரி  அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு.

வழக்கம் போல  இருவரும் ஆற்றில் குளித்துவிட்டு நந்தவனத்துக்கு சென்று  மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து தியான  அறையில் வைத்தனர். தியானத்திற்கு  வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான் சீடன். குருவும் தியானத்தைத்   தொடங்கினார்.

சீடனின் மனம் தியானத்தில் லயிக்கவில்லை அவன் கேட்ட கேள்வியிலேயே சுழன்றுகொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ கூக்குரல்கள். உணர்வுக்கு வந்த போது அவன் கண்ட காட்சி,    சற்று முன் உணர்வோடு தியானம்  செய்துகொண்டிருந்த அவனுடைய குரு மல்லாந்து  படுத்திருந்தார். ஆமாம் அவர் உடலில் சலனமில்லை. அவர் உடல் சில்லிட்டுப் போயிருந்தது. அவர் முக்தி அடைந்துவிட்டார்.

அவனால் நம்ப முடியவில்லை ஆனாலும் அடுத்தடுத்து  குருவை  அடக்கம் செய்ய  ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு  நினைவு தெரிந்த நாள் முதல்  அவன் உலகமே குருதான். இப்போது அவரும் போய்விட்டாரே இனி அவன் என்ன செய்யப்போகிறான்.அவனுக்கு துயரம் மேலிட்டது, எதிர்காலம் அவனை பயமுறுத்தியது.

யார் யாரோ அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். இனி அவன்தான் அந்த ஆசிரமத்துக்கு தலைமை என்றார்கள். அவன் மனதில் இதெல்லாம் உறைக்கவில்லை. ஆயிற்று குருவின் உடலை சமாதியில் இட்டு மண்ணை நிரப்பி மேலே மூடினர்.

மறு நாள் சீடன் குளித்துவிட்டு வந்தான். ஆஸ்ரமத்தில் குருவின் புகைப்படம்  ஒரு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.  அவருடைய படத்துக்கு மாலை சாற்றிவிட்டு. அவரை வணங்கி தன் கடமைகளைத் தொடங்கினான்.
அசரீரியாய் குருவின்  குரல் கேட்டது  சீடனே  என்ன செய்கிறாய்?

குருவே உங்களை  வணங்கி விட்டு  என் கடமைகளைத் தொடங்குகிறேன் என்றான்  அவன்.

ஆமாம் நீ ஏன் என்னை வணங்க வேண்டும் ?,  கடவுளையல்லவா வணங்க  வேண்டும்? என்றார் குரு.

குருவே என்னைப் பொறுத்தவரை தாய்,தந்தை, குரு ,கடவுள் எல்லாமே நீங்கள்தானே அதனால்தான் உங்களை  வணங்கி விட்டு   கடமைகளை தொடங்குகிறேன் என்றான்.

அப்படியானால் நீ என்னைக் கடவுளாகவும் மதிக்கிறாயா? என்றார் குரு.
ஆம் குருவே என்றான் சீடன்.

இப்போது புரிந்ததா  கடவுள் எப்படி உருவானாரென்று ?  என்று கேட்டார் குரு.

ஆமாம்  இப்போது புரிந்துகொண்டேன் என்றான் கண்களில் நீர் வழிய சீடன்.
அவன் காதுகளில்  யாரோ பிரார்த்தனை செய்யும் சப்தம் கேட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு,உணர்வுக்கு திரும்பினான்.

எதிரே அவனுடைய  குரு தியானம் செய்துகொண்டிருந்தார். தியானத்தை முடித்துவிட்டு அவனைப் பார்த்து  இந்தப் பிரசாதத்தை எல்லோருக்கும் கொடு என்றார்.

சீடனும் பிரசாதத்தை எல்லோருக்கும் வினியோகிக்கத் தொடங்கினான்   ஒரு புதிய தெளிவுடன்.

"நீங்கள் எல்லா மதங்களுடைய கருத்தும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டார்கள்.
யார் கடவுளை வணங்கினாலும் தன்னுடைய எண்ணத்தைத்தான், மனதைத்தான் வணங்குகிறானே தவிர
வேறு ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்த ஒரு கவிதையைப் படித்துக் காண்பித்தேன்.

"கடவுளை வணங்கும் போதுகருத்தினை உற்றுப்பார் நீ 
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே" 

எனவே யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும் சரி, சிறிது நேரம் பொறுத்து எது நிற்கிறது என்று
பார்த்தால் உன்னுடைய மனம்தான் அந்த வடிவம் எடுக்கிறது.விக்ரகத்தையோ,சக்தியையோ,அகண்டகாரமாக
இருக்கக் கூடியதையோ வேறு எந்தப் பொருளையோ கடவுள் என்று வணங்கினாலும் அந்த வடிவம் எடுப்பது
நீதான் உன் மனம்தான்" என்கிறார் மகரிஷி


கொசுறு :
கண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

அடப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
கடவுளென...

Wednesday, 12 December 2012

எல்லாம் துறந்தவர்!

அந்த ஊருக்கு அருகாமையில் ஒரு துறவி வசித்து வந்தார்.
அவரது ஆன்மீகப் பணி  அனைத்து தரப்பினருக்கும் 
பயனளிக்கும் வண்ணம் இருந்தது.அவரது 
அறிவுரைகளைப்  பெற மக்களின் கூட்டம் 
வந்தவண்ணமே இருந்தது.எல்லா மதத்தினரும் அவரது 
சித்தாந்தத்தை ஏற்று நடந்தனர்.
அதனால் அவரது புகழ் நாளுக்கு நாள் பெருகியது.
அதே ஊரில் ஒரு நாத்திகர் இருந்தார். அவரது கொள்கைப்படி துறவி ஒரு ஏமாற்றுக்கார வித்தகராகவே தெரிந்தார்.
துறவி ஒரு ஏமாற்றுப் பேர்வழியென்று அனைவருக்கும் 
தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஒரு நாள், துறவியை சந்திக்க காத்திருந்த பெரும் கூட்டத்தில் நாத்திகரும் அமர்ந்துகொண்டார்.
எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் துறவியிடம்,
ஐயா, இந்த ஊரில் தாங்கள் ஒருவர்தான் முற்றும் துறந்த  துறவி, ஞாநி என்று எல்லோரும் கூறுவது உண்மையா என்றார்.
அதற்கு அந்த துறவி பதில் கூறினார்:
யார் சொன்னது, என்னைவிட உயர்ந்த துறவி, இந்த
ஊரில் அதுவும் இந்தக் கூட்டத்திலேயே  இருக்கிறார் என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும்  யாரைக் குறிப்பிடுகிறார் என ஆவலாய் துறவியை நோக்கினர்.
துறவி நாத்திகரைப் பார்த்துச்  சொன்னார் :
என்னை விடப்பெரிய துறவி நீங்கள்தான்,  ன்னைப் போன்ற துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம், நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே... என்றார்.
நாத்திகர் புன்னகைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.


மகரிஷி அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.திராவிடர் கழகதைச் சேர்ந்த ஒரு அன்பர்
மகரிஷியிடம் வந்தார். “ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று  சொல்லி எங்களை  எல்லாம்
பக்குவப் படுத்தி விட்டுப்
போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.
ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம்
என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார்.
“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில்
ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர்
எதிர்த்தார்.  அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.
நானும் அதைத்தான் சொல்கிறேன்.  இறைவன்
எங்கும் நிறைந்த பரம்பொருள்.அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து
மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக
உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன். கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது
போல மக்கள் மனத்தைப் பண்படுத்தி சீர் செய்யும்
வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன்.
இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

கொசுறு :


“தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”

Monday, 10 December 2012

தன்முனைப்பு!(Ego)

 குரு ஒருவரிடம் பல சீடர்கள் இருந்தனர்.அதில் ஒரு சீடருக்கு "தான்" என்ற தன்முனைப்பு  அதிகம்.மற்ற சீடர்கள் முன்பு குருவை விட தான் அதிக புத்தகங்கள் படித்திருப்பதாகவும் தனக்குதான் அதிக விஷய  ஞானம் இருப்பதாகவும் காட்டிகொள்வான். அதனால் குரு  தன்னிடம் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும் கூறிக்கொள்வான். தவிர குருவிடம்   மற்ற சீடர்கள் முன்னிலையில் தேவையற்ற கேள்விகளைக்    கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
குரு ஒருநாள் தொந்தரவு செய்து கொண்டிருந்த அந்த சீடனிடம்  பட்டை தீட்டாத  ஒரு கல்லைக் கொடுத்து காய்கறி சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து, மக்கள் அந்த கல்லுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று தெரிந்து வரச் சொன்னார்.

சீடனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள்.

சீடன்
குருவிடம் வந்து, விபரம் கூறி அங்கு கல்லை பத்து பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான்.குரு அடுத்து அதே கல்லை தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதே போலக் கவனிக்க சொன்னார்.
சீடன் கடை வீதிக்கு சென்று, திரும்பி வந்து ''இங்கு பரவாயில்லை. இந்தக் கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள்'' என்றான்.
பின்னர்
குரு அவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார். அங்கு போய் வந்த சீடன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்''என்றான்.
குரு சொன்னார்,நீ கல்லை விற்கவில்லை என்றபோதும் விலை மட்டும் எப்படி கூடியது? ந்தக்  கல்லைப் போல்தான் நீயும் இருக்கிறாய். காய்கறி சந்தையில் இருக்கும்போது நீயும் அதன் மதிப்பு பத்து பைசாதான் என்று நினைத்தாய். இப்போது ஆன்மீகத்தில் நீ காய்கறி சந்தையில் தான் இருக்கிறாய். அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்து பைசா தான். உன் மனதை பட்டைதீட்டி அதை வைரம் விற்கும் விலையைப் போல உயர்த்து. இறைநிலை உணர்வு பெறும்போது  தன்முனைப்பு நீங்கி உன் மனம் முழுதும்  அன்பும் கருணையுமே நிறைந்திருக்கும்.மேலும் சந்தேகம் இருந்தால் விளக்க முயற்சிக்கிறேன் என்றார்.
அன்றிலிருந்து அந்தச் சீடன் அந்த குருவைத் தொந்தரவு செய்யாமல் ஆன்மீகத்தில் தன்னை  உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்தினான்.

"மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன.இந்நிலையைத்தான் ஆணவம் என்பார்கள்.நாம் இதனை "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.
இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி? அது அவ்வளவு எளிதானதா? அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா? இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு.மனிதன்தான் தனது தன்முனைப்புத் திரையை விலக்கிக்கொள்ள வேண்டும்.அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே.சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது" என்கிறார் மகரிஷி.  
  
கொசுறு :
"தன்முனைப்பு  உள்ளவனிடம் உள்ள ஒரே ஒரு நல்ல விசயம்
வேறு யாரைப் பற்றியும் அவன் பேசுவதில்லை"