எப்போது அவர் அந்த ஊருக்கு வந்தார் என்று யாருக்கும் சரியாக நினைவில்லை; எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளைத் தாண்டி இருப்பார் என்று ஊர்மக்கள் ஊகித்தார்கள்.
எப்போதும் அமைதியாகவே இருப்பார்; யாரிடமும் பேசுவதில்லை. பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஓரிரு சொற்கள் பேசுவார்; பேசியவுடன் மீண்டும் அமைதியாகி விடுவார்.
ஒரு நாள் அந்தக் கோவிலுக்குப் புதிய துறவி ஒருவர் வந்தார்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த முதிய துறவியை வணங்கினார்.
“சுவாமி, நான் தொலைவிலிருந்து வருகிறேன்; இங்குத் தங்கிக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உடன்பாட்டுக்கு அடையாளமாகத் தலையை அசைத்தார் முதிய துறவி.
அன்றிலிருந்து அந்த இளந்துறவிக்கும் கோவில் மண்டபமே இருப்பிடம் ஆகியது.
சில திங்கள் கழிந்தன.
தம் வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் இளையவரிடம் பேசத் தொடங்கினார் முதியவர்.
“நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?” என்று கேட்டார்.
“வாழ்க்கையே வெறுத்துவிட்டது, சுவாமி! திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன்; முடியவில்லை. எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டன. ஒவ்வொரு முறையும் என்ன என்னவோ தடைகள்! எவ்வளவு காலம்தான் முயற்சி செய்வது? வெறுத்துவிட்டது. எனக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை; அதனால்தான் துறவியானேன். மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஆமாம், தாங்கள் துறவி ஆனது ஏன் சுவாமி?” என்று கேட்டார் இளையவர்.
“எனக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்; அதனால்தான்!” என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் அமைதியானார் முதிய துறவி.
"இல்லறமும் துறவறமும்" பற்றி மகரிஷி பின் வரும் பாடலில் எழுதியது
"இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
இதுவரையில் கருதி வந்தார் உலகமக்கள்
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தை பண்படுத்தி எனையறிந்தேன்
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பம் துன்பம் உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தை திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்
இல்லறத்தில் மெய்ஞானம் விளங்கி வாழ
இயலாத காலமொன்று இருந்ததுண்டு
இல்லறத்தை விட்டு பலர் துறவை நாடி
எங்கெங்கோ சுற்றி அலைந்தார் அந்நாளில்
இல்லறத்தில் கடமை செய்தே தவம் பயின்று
இறை நிலையை அறியும் முறை கண்டுகொண்டோம்
இல்லறமும் துறவறமும் ஒன்று சேர்ந்து
இணைந்த உயர் ஆறாம் கண்டோம் மகிழ்ச்சி பெற்றோம்"
கொசுறு:
ஆசையை அடக்குவது எப்படி?
அது முடியாமல்தானே சாமியார் ஆனேன் அப்பனே!
அது முடியாமல்தானே சாமியார் ஆனேன் அப்பனே!
அற்புதமான பதிவு நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி !
Deleteஉணர்வோம் உயர்வோம்!